கோலாலம்பூர் | சூன் 22:-
உடல் அங்கத்தில் குறை எனும் ஒரே காரணத்தால் மலேசியாவின் ஒரு பொதுப் பல்கலைக்கழகத்தில் எசுபிஎம் தேர்வில் 9 A க்கள் எடுத்துள்ள மாணவிக்குக் கல்வி பயில வாய்ப்பு வறுக்கப்பட்டுள்ளது என மலாயா பல்கலைக்கழக இந்தியப் பட்டதாரிகள் நல அமைப்பு (Concerned UM Indian Graduates – Cumig) குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று உயர்க்கல்வி அமைச்சர் நோராய்னி அகமாட்டுக்கு அனுப்பப்பட்டக் கடிதத்தில் கரிஸ்மா (உண்மையானப் பெயர் அல்ல) 2019 எசுபிஎம் தேர்வில் 9 Aக்களைப் பெற்றுள்ள பெற்றிருந்தும் அவருக்கு அந்தப் பொதுப் பல்கலைக்கழகத்தில் பயில வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகையத் தேர்வு முடிவைக் கொண்டு மலேசியப் பொதுப் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியைத் தொடர முடியும். அதற்கானத் தயார் நிலையில், கரிஸ்மா எனக் குறிப்பிடப்படும் அம்மாணவி, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் இளைங்கலைக்கு முன்னதான அடிப்படைக் கல்வியான Program Prauniversiti ASASIpintar UKM (APP) எனும் பட்டயக் கல்விக்கான நேர்முகத் தேர்வுக்கும் அனைத்து வகையான ஆவணங்களையும் காணொலியையும் தயார் செய்து விட்டார்.
இருந்தும், UPUOnline எனும் உயர்க்கல்விக்கான இணையத்தள விண்ணப்பத்தில் முன்னதாகத் தாம் தேர்வு செய்திருந்த அனைத்து பட்டப் படிப்புகளும் நீக்கப்பட்ட நிலையில் வெறும் 2 டிப்ளோமா, சமூகக் கல்லூரியின் (Kolej Komuniti) 20 சான்றிதழ்ழ் கல்வியும் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அந்த இணையத்தள விண்ணப்பப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் 20 பொதுப் பல்கலைக்கழகங்கள், 36 பல்துறை தொழிற்கல்வி மையங்கள் (politeknik), 4 தொழில்துறை பயிற்சி மையங்கள் இருந்தும், கரிஸ்மா எனக் குறிப்பிடப்படும் அந்த மாணவிக்கு வெறும் 2 டிப்ளோமா, சமூகக் கல்லூரியின் (Kolej Komuniti) 20 சான்றிதழ்ழ் கல்வியும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு அவர் பேறு குறைந்தவர் என்ற ஒற்றைக் காரணம் தான் எனக் குறிப்பிடுகிறார் மலாயா பல்கலைக்கழக இந்தியப் பட்டதாரிகள் நல அமைப்பின் நிகராளி தனசேகர் இராமசாமி.
இதனை அமைச்சர் நோராய்னி அகமாட்டுக்கு கடந்த சூன் 19ஆம் நாள் அனுப்பட்டக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
UPUOnline என்பது மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு உயர்க்கல்வியைத் தொடர விண்ணப்பிக்கக் கூடிய இணையத் தள வசதியாகும். குறிப்பாக மாணவர்கள் கிடைக்கப்பெற்றத் தங்களின் எசுபிஎம் முடிவுகள் அடிப்படையில் சூன் 15 ஆம் நாள் தொடங்கி 7 நாட்களில் புதுப்பிக்க வழிவகை செய்கிறது. இதன் அடிப்படையில் 2021 / 2022 கல்வித் தவணைக்கு அம்மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவார்கள்.
தற்போது அதன் இறுதி நாளாக 2 சூலை என நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமது வாய்ப்புகள் நீக்கப்பட்ட நிலையில் UPU இணையப்பக்கத்தில் விளக்கம் பெற தகவல் அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பட்டயக் கல்விக்கான அனைத்துத் தகுதிகளையும் நிறைவு செய்திருந்தாலும், கரிஸ்மா தேர்ந்தெடுத்துள்ள பட்டயக் கல்வியானது பேறு குறைந்த மாணவருக்கான வசதிகள் இல்லை என பணியில் இருந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
UPUOnline-இன் படி பல்கலைக்கழகத்தில் பேறு குறைந்தவர்களுக்கென முடிவு செய்யப்பட்டுள்ள பட்டயக் கல்வியை மட்டுமே தேர்தெடுக்க முடியும் எனவும் அது விண்ணப்பிக்கும் மாணவரின் குறையைப் பொறுத்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இது கரிஸ்மாவுக்கு மட்டும் நடக்கவில்லை, மாறாக, கரிஸ்மா போன்று மற்ற சில மாணவர்களின் இதனையே எதிர்நோக்கியுள்ளதாக தனசேகர் கூறினார்.
இது குறித்து மலேசிய தேசியப் பல்கலைக்கழகமும் மகளிர், குடும்ப, சமூக நல மேம்பாட்டு அமைச்சும் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் நன்முறையில் இதற்கு பதிலளித்துள்ளதாகவும் தனசேகர் தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பில் UPUOnline, மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தான் பேச இருப்பதாக தனசேகர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மலேசிய பேறு குறைந்தோர் சங்கம் இவ்விவகாரம் குறித்து தனசேகர் – கரிஸ்மாவுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. கரிஸ்மஆவுக்குக் கொடுக்கப்பட்டக் காரணம் நியாயமில்லாதது. மலேசியப் பொதுப் பல்கலைக்கழககத்தில் பயில கடும் முயற்சி எடுத்துள்ள பேறு குறைந்தவர்கள் மீதான பாகுபாட்டைக் குறிக்கிறது என அவ்வமைப்பு கூறியது.
பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்லும் ஒரு பட்டயக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுத் தேர்வின் (எசுபிஎம் – எசுதிபிஎம்) முடிவுகளைத் தகுதிகளாகப் பார்க்கவேண்டுமே அன்றி விண்ணப்பிக்கும் மாணவரின் உடல் தொடர்பான தற்போதைய நிலையையோ அல்லது குறிப்பிட்டப் பட்டயக் கல்வி வளாகத்தில் அல்லது புலத்தில் பேறு குறைந்தவருக்கான வசதிகள் இருக்கின்றதா இல்லையா என்பது அல்ல என மலேசிய பேறு குறைந்தோர் சங்கத்தின் தலைவர் முருகேசுவரன் வீராசாமி கூறினார்.

