மலாக்கா | 4/7/2021 :-
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு – சமையல் பொருட்கள் உதவி வழங்கப்படும் முறை எளிதாக்கப்பட வேண்டும் என ஜசெக கட்சியின் கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸ் சியா ஷூ சின் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக் காலமாக உதவிகள் தேவைப்படும் நலிந்த மக்களுக்கு உணவு – சமையல் பொருட்கள் உதவியை வழங்கும் தரப்பினரின் முயற்சியை அதிகாரத்துவத்தினர் தடுத்திருப்பதாகவும் கோவிட்-19 செயலகத்திற்குத் தங்களின் உதவி முயற்சி தெரிவிக்கப்படாததால் அவ்வாறு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு இலக்காகி விடுவோமோ எனும் அச்சத்தால் உணவு – சமையல் பொருட்கள் உதவிகள் வழங்க பலர் முன்வர மறுப்பதாகப் பல புகார்கள் தமது தரப்பு பெற்றிருப்பதாக அலெக்ஸ் சியா கூறினார்.
இம்மாதம் 1ஆம் நாள் மலாக்கா, பண்டான் மாலிம் பகுதியின் உணவக உரிமையாளர் உணவு வங்கித் திட்டத்தை செயல்படுத்தியதற்காக காவல்துறையினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்த சம்பவத்தைச் சுட்டிக் காட்டி அலெக்ஸ் சியா அவ்வாறு கூறினார்.
தமது சட்டமன்றத் தொகுதி சேவை மையத்திற்கு அருகில் அந்த உணாவு வங்கித் திட்டம் செயல்படுத்தப்பட்டது எனவும் அவ்வாறான நடவடிக்கைக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனக் காவல் துறையினர் தெரிவித்ததாகவும் அலெக்ஸ் சியா சொன்னார்.
காவல்துறையினர் தங்களுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டக் கடமையைச் செய்கிறார்கள். அவர்களைக் குற்றம் கூறுவதற்கில்லை.
இருந்தாலும், இது போன்ற உதவிகள் வழங்கப்படும்போது அவர்களின் கண்காணிப்பில் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், மேலும், கூடல் இடைவெளி போன்ற விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என அலெக்ஸ் சியா தெரிவித்தார்.

