கோலாலம்பூர் | 6/7/2021 :-
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் மளிகைக் கடைகளிலும் பலசரக்குப் பேரங்காடிகளிலும் அத்தியாவசியம் இல்லாதப் பொருட்களை மீண்டும் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தற்காப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
உள்நாட்டு வாணிபம் – பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு ஏற்ப அத்தியாவசியம் அல்லாதப் பகுதிகளை கடைகளும் பலசரக்குப் பேரங்காடிகளும் மூடி வைந்திருந்தன.
குறிப்பாக கல்வி தொடர்பான பயன்பாட்டுப் பொருட்கள் விற்கப்படும் பகுதிகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், அவை தேவைப்படும் முக்கியமானப் பொருட்களாக இருக்கின்ற நிலையில் அவைகளை விற்கும் பகுதிகள் மூடப்பட்டிருப்பது பலரின் விமர்சனத்திற்குள்ளானது.
ஆனால், உள்நாட்டு வாணிபம் – பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சின் அந்த விதிமுறையை தேசியப் பாதுகாப்பு மன்றம் நீக்கியது.
இருந்தாலும், தண்டம் விதிக்கப்படும் எனும் அமச்சத்தால் சில கடைகளில் இன்னமும் அந்தப் பகுதிகள் மூடப்பட்டுள்ளது.
மேலும், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ளவர்கள் தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் இஸ்மாயுல் சப்ரி யாக்கோப் கூறினார்.
மேலும், தங்களின் சொந்த ஊரில் குடும்ப உறுப்பினரை தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைத்துச் செல்ல மாவட்டத்தை / மாநிலத்தைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
காவல்துறையினரிடம் MySejahtera செயலியில் தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புக்கான விவரத்தைக் காட்டி அனுமதியைப் பெறலாம்.
தடுப்பூசிக்காகச் செல்ல ஓட்டுநருடன் 3 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மீட்சித் திட்டத்தின் விதிமுறைப்படி முதல் இரண்டு கட்டங்களில் உணவுக் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட இடங்களில் உணவுக் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

