Site icon அநேகன்

அனைத்துத் தொழில் துறைகளும் செயல்படுவதற்க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் ! – மைக்கி

கோலாலம்பூர் | 6/7/2021 :-

அரசாங்கம் அனைத்து தொழிற்துறைகளுக்கும் கருணை காட்ட வேண்டும். வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இப்பொழுது வரை அவர்கள் வியாபாரத்தை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நிறைய வியாபாரிகள் தொழில் முனைவோர்களாக இருந்து வெளியேற வழிவகுக்கும் என மைக்கியின் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அனைத்துத் தொழிற்துறைகளும் திறக்க அரசாங்கம் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நாங்களும் எங்களது வியாபாரத்தில் மூலம் வரும் வருவாயில்தான் குடும்பத்தை வழிநடத்துகிறோம். எங்களது பணியாளர்களுக்கும் ஊதியம் தருகிறோம். வியாபாரச் செயல்பாட்டுச் செலவுகளைச் செலுத்துகிறோம். குடும்ப உறுப்பினர்களின் சுகாதார செலவுகளையும் எங்களின் பணியாளர்களுக்கும் நாங்கள்தான் செலவு செய்கிறோம். அவர்களுக்குத் தேவைப்படும் அவசர நிதி உதவிகளையும் நாங்கள்தான் கொடுக்கிறோம்.

ஆனால் வியாபாரம் செய்யாமல் எவ்வளவு காலம் இச்செலவுகளை எங்களால் செய்ய முடியும் என அவர் வினவினார்.

இந்தியர்கள் பாரம்பரியத் தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ளனர். காலம் காலமாக செய்யும் தொழிலைத் தவிர அவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாது. நிறைய முதலீடுகள் அவர்களது வியாபாரத்தில் செய்துள்ளனர்.

கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலையால் நாட்டில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளது. இக்காலக்கட்டத்தில் ஒரு சில தொழில் துறைகள் செயல்படுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. அரசாங்கம் மூடக்கி வைக்கப்படுள்ளத் தொழில் துறைகள் செயல்படுவதற்க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். முடி திருத்தும் நிலையம், ஜவுளி, உலோகம் மறுசூழற்ச்சி மையங்கள் போன்று அனைத்து வியாபாரங்களும் செயல்பட அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

அனைத்து வியாபாரங்களையும் திறப்பதினால் கோவிட்-19 கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம். அதனால்தான் நாங்களே முன் வந்து கடுமையான விதிமுறைக்களை அறிவியுங்கள் என சொல்கிறோம். நாங்கள் அதனை பின்பற்றி வியாபாரங்களைச் செய்கிறோம். பின்பற்ற தவறுபவர்களை தண்டியுங்கள். அதனையும் ஏற்றுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மக்களிடமும் நாங்கள் கோரிக்கைகளை வைக்கிறோம். அனைத்து விதிமுறைகளையும் கடைபிடியுங்கள். முகக் கவசங்களை அணியுங்கள். உங்களின் அன்றாட நடவடிக்கைகளை பட்டியலிட்டு சரியான காலங்ககளில் செயல்படுத்துங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களை தவிருங்கள்.

முதியவர்களையும் பிள்ளைகளையும் வீட்டிலேயே இருக்க வழி செய்யுங்கள். இது முக்கியமான காலம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் கோவிட் தொற்று நோயை முறியடிக்க முடியும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வியாபாரங்கள் நடைபெறவில்லை என்றால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், அரசாங்கம் மக்களுக்கு செய்ய முற்படும் அனைத்து நடவடிக்கைகளும் தடைபெறும். இதனால் நாட்டிற்கும் நமக்கும் தான் பாதிப்பு. இதனை நம் மனதில் கொண்டு செயல்படுவோம். மீண்டும் எழுச்சி பெற்ற மலேசியாவை உருவாக்குவோம் என டத்தோ ந கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

அவ்வகையில், மைக்கி நாட்டின் பிரதமருக்கு, மற்ற அமைச்சுகளுக்கும் தங்களின் கோரிக்கையைக் கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளது. அரசாங்கம் கூடிய விரைவில் நல்ல பதிலை அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்

Exit mobile version