கோலாலம்பூர் | 8/7/2021 :-
மலேசிய அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கம் (அஸ்தி), மலேசியத் தமிழாசிரியர்களிடமும் தமிழ் மாணவர்களிடமும் நன்கு அறிமுகமான இயக்கமாகும்.
இவ்வியக்கம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் முதன்மையானதாக இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா போட்டியைக் குறிப்பிடலாம். இன்று நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நிலையிலான புத்தாக்கப் போட்டிகளில் சாதனைகளைக் குவித்து வருவதற்கு இப்போட்டியின் பங்கும் அளப்பரியது என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா, மாநில அளவிலான அறிவியல் விழா மற்றும் இல்லிருப்பு & பள்ளி அளவிளான அறிவியல் விழா என இரு பகுதிகளாக நடைபெற்றன. இதில் இல்லிருப்பு & பள்ளி அளவிலான அறிவியல் விழாவில் நாடு தழுவிய அளவில் 268 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 32,915 மாணவர்கள் பங்கெடுத்தனர்.
அந்த வகையில், இல்லிருப்பு & பள்ளி அளவிலான அறிவியல் விழா நிழற்படத் தொகுப்புப் போட்டிக்கான வெற்றியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
அதில், செந்தூல் தமிழ்ப்பள்ளி முதலாம் நிலையில் வெற்றி வாகைசூடி 1000 ரிங்கிட் ரொக்கத்தையும், அலோர் காஜா தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையில் 700 ரிங்கிட் ரொக்கத்தையும் வென்ற வேளையில், புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையில் 500 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் தட்டிச் சென்றனர்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இப்போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கும், தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அஸ்தி தனது மனமார்ந்த நன்றிகளை நவில்கின்றது.

