Site icon அநேகன்

கிள்ளான் மருத்துவமனை : பயிற்சி மருத்துவர்களின் தங்கும் விடுதி, அன்றாட சிகிச்சை மையம் தற்காலிக வார்டாக மாற்றம் கண்டன !

கிள்ளான் | 12/7/2021 :-

இங்குள்ள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியும் அன்றாட சிகிச்சை மையமும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தற்காலிக வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இச்சூழ்நிலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏற்பட்டதாக அம்மருத்துவமனை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

தற்போது அதிகரித்துள்ள கோவிட்-19 நேர்வுகளாலும் குறிப்பாக இம்மருத்துவமனையைப் பொருத்தமட்டில் அவசர சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாலும் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையின் உயர்மட்ட தலைமைத்துவமும் அனைத்துப் பிரிவின் தலைவர்களும் சில இடங்களைக் கண்டறிந்து அதனைத் தற்காலிக வார்டுகளாக மாற்றியமைத்து கோவிட்-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் அன்றாட சிகிச்சை மையத்திலும் கடந்த 9/7/2021 இரவு 8.00 மணி முதல் கோவிட்-19 நோயாளிகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளது என மருத்துவமனை வெளியிட்டத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் 4,000 க்கும் மேல் கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டது அம்மருத்துவமனைக்கு நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை. மேலும் அதிகரித்துள்ள நேர்வுகளால் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க கட்டில்களின் எண்ணிக்கைப் போதவில்லை.

எனினும், தங்கள் மருத்துவமனையின் பணியாளர்கள் நம்பிக்கை இழக்காமல் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாகவும் அவர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துள்ளது.

Exit mobile version