Site icon அநேகன்

ஃபைசர் தடுப்பூசி – ஜோகூர் இளவரசர் ஒதுக்கீடு : போலி – ஜோகூர் பாரு மாநகர் மன்றம்

ஜோகூர் பாரு | 24/7/2021 :-

ஃபைசர் தடுப்பூசிக்கானப் பதிவு – ஜோகூர் மாநில இளவரசருக்கு ஒதுக்கப்பட்டத் தடுப்பூசி ஆகியப் பெயர்களில் சமூக ஊடகத்தில் பரவும் தகவல் போலி என ஜோகூர் பாரு மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

இது போன்ற எந்தப் பதிவு பாரத்தையும் தமது தரப்பு யார் பெயரிலும் வெளியிட்டதில்லை எனவும் தற்போது சமூக ஊடகத்தில் பரவி வரும் பாரம் Southern Volunteers Johor Bahru தடுப்பூசி பதிவுக்காகப் பயன்படுத்தும் பாரம் எனவும் அம்மன்றம் விளக்கியுள்ளது.

தடுப்பூசிக்கு இன்னும் பதியாத இந்த மாநகர் மக்களுக்கு உதவுவதற்காகவும் அது மைசெஜாத்தெரா செயலி வாயிலாகவோ அல்லது தேசியத் தடுப்பூசி கையிருப்பு உறுதிப்பாட்டுச் செயற்குழுவின் இணையப்பக்கம் http://www.vaksincovid.gov.my வாயிலாகவோ பதிவு செய்யப்படுவதற்காக உருவாக்கப்பட்ட பாரமாகும்.

அதே சமயம் Southern Volunteers Johor Bahru குழுவினர் தேசியத் தடுப்பூசி கையிருப்பு உறுதிப்பாட்டுச் செயற்குழுவின் இணையப்பக்கத்தைப் பயன்படுத்தி தடுப்பூசிக்கானப் பதிவை சரிபார்க்கிறார்கள்.

அந்த முறை கூடுதல் உதவி முறையே அன்றி அதுவே முதன்மை வழிமுறை அல்ல. சுயமாக மைசெஜாத்தெரா செயலி அல்லது JKJAV இணையப்பக்கத்தில் பதிவு செய்வதே முதன்மை வழிமுறை ஆகும்.

எனவே, மாநகர் மக்கள் தங்களுக்குப் பகிரப்படும் இது போன்றத் தகவல்களை முறையாக தொடர்புடைய இலாகா அல்லது அமைச்சின் அதிகாரப்பூர்வப் பக்கங்களில் சரி பார்ப்பது நன்று என ஜோகூர் பாரு மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.

Exit mobile version