புக்கிட் மெர்தாஜாம் | 23/7/2021 :-
பினாங்கு இந்து அறப்பணிவாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், நேற்று மாலை 7.00 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது காரில் இருந்து இறங்கியவுடன் அந்த மூவரும் அவரைத் தாக்கியுள்ளனர். 70 வயதான டத்தோ இராமாவின் உடலில் பல வெட்டுகள் பதிந்துள்ளன, இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக இல்லை. இந்தச் சம்பவத்திற்கு பின்னர் அவர் நேற்று பி.எம் அரசு மருத்துவமனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என பினாங்கு மாநில்த் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.
நேற்று இரவு 10 மணியளவில் டத்தோ இராமச்சந்திரனைப் பார்க்கச் சென்ற இராமசாமி அவரது உடல் நிலையைக் கண்டு தாம் வருத்தமடைவதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று இரவு டத்தோ இராமச்சந்திரன் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் நேற்று அவரது மனைவி, மருமகன் ஆகியோர் காவல்துறையில் புகார் செய்தனர். கோழைத்தனமான இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சந்தேக நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் இராமசாமி தெரிவித்தார்.
“டத்தோ இராமா சிறந்த மனிதர், தொழிலாளர் விவகாரங்களில் மிகவும் அறிவார்ந்தவர், முன்னாள் பிரபல தொழிற்சங்கவாதி, மனிதவள மேலாளர். அவர் ஓய்வு பெற்றதும், ஜ.செ.க.வில் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இரண்டு முறை எம்.பி.எஸ்.பி நகரான்மைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.”
நகரான்மைக்கழக பதவியை டத்தோ இராமச்சந்திரம் துறந்த பின்னர், அவரது அனுபவத்தையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்டு பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநராக (ED) நியமிக்கப்பட்டார்.
பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்குச் சேவை செய்வதற்கான முன்னணி அமைப்பாக அறப்பணி வாரியத்தை வலுப்படுத்துவதில் அவர் தனது நிலைப்பாட்டில் சிறந்து விளங்கினார் என இராமசாமி கூறினார்.
டத்தோ இராமாவிற்கு எதிரான தாக்குதல் பினாங்கு அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல் எனச் சித்தரித்த இராமசாமி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருக்கும் தாம் பினாங்கு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இந்த விவத்தில் அதிகக் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் கோழைகளுக்குத் தாம் பயப்படப்போவதில்லை என இராமசாமி பினாங்கு இந்தியர்களுக்கு உறுதியளித்தார்.
இதற்கிடையில், டத்தோ இராமா விரைவில் குணமடை வேண்டியும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக தமது தரப்பு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மேலும் சொன்னார்.

