ஷா ஆலாம் | 26/7/2021 :-
யூடியூப் என்ற காணொலி இணையத் தளத்தில் ‘திசைகள் டிவி’ என்ற பெயரில் இயங்கிவரும் தமிழ் செய்தி ஊடகத்திற்கு எதிராக இன்று காவல் துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டது.
பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகவும், தவறான தகவல்களை வழங்குவதாகவும், நாட்டின் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் சட்டங்களுக்கு எதிரான வகையில் செயல்படுவதாகவும் திசைகள் மீது இந்தப் புகார் செய்யப்பட்டிருக்கிறது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பத்திரிகை செயலாளர் எல்.சிவசுப்பிரமணியம் இன்று திங்கட்கிழமை (ஜூலை 26) ஷா ஆலாம் காவல் நிலையத்தில் இந்தப் புகாரைச் செய்தார்.
இந்த செய்தி ஊடகத்தின் மீது காவல் துறையினரும் தொடர்பு பல்ஊடக ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிவசுப்பிரமணியம் தனது புகாரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திசைகள் ஊடகத்தின் காணொலி வடிவிலான அண்மைய இரண்டு செய்தி ஒன்றில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு வழங்கிய கொள்கலன் குறித்து இழிவுபடுத்தும் விதத்தில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வண்ணம் திசைகள் டிவி செய்தி வெளியிட்டிருக்கிறது.
கொவிட் மரணங்களைத் தொடர்ந்து நல்லுடல்களை வைப்பதற்காக நல்லெண்ணத்தோடு, தனது சொந்த முயற்சியில் விக்னேஸ்வரன் கொள்கலன்களை கிள்ளான் மருத்துவமனைக்கு வழங்கியிருந்தார்.
ஆனால், மரணமடைந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக விக்னேஸ்வரன் இந்தக் கொள்கலன்களை வழங்கியிருக்கிறார் என திசைகள் தனது செய்தியில் தெரிவித்தது.
அந்த நிறுவனங்கள் அதிக விலையில் சவப் பெட்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்றும் அவர்களுக்கு உதவும் நோக்கிலேயே விக்னேஸ்வரன் இந்தக் கொள்கலன்களை வழங்கினார் என திசைகள் செய்தி மஇகாவையும் அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும்இழிவுபடுத்தியிருக்கிறது.
மரணமடைபவர்கள் குடும்பங்கள் சவப் பெட்டிகள் வாங்கக் கூட பணமில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்றும் முதலில் அவர்களுக்கு உதவுங்கள் என்று அந்த செய்தி விக்னேஸ்வரனையும், மஇகாவையும் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆனால், கொவிட் காரணமாக மரணமடைபவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசாங்கமும், சிலாங்கூர் அரசாங்கமும் ஏற்கனவே நிதி உதவிகள் வழங்கி வருகின்றன. எனவே, கொவிட் மரணமடைபவர்களின் குடும்பங்களுக்கு மஇகா உதவ வேண்டும் என்பது தவறான கண்ணோட்டத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியாகும்.
இரண்டு காணொலி செய்திகளின் மூலம் மஇகாவையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும் சிறுமைப்படுத்தும் வண்ணமும் அவர்கள் தவறான நோக்கங்களோடு, சுயலாபத்திற்காக கொள்கலன்களை வழங்கியிருக்கிறார்கள் என்பது போன்றும் திசைகள் செய்திகள் சித்தரிக்கின்றன.
இதன் மூலம் மஇகா, டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீது மக்களிடையே வெறுப்புணர்வைத் தோற்றுவிப்பதுதான் திசைகள் செய்தியின் உள்நோக்கமாகும் என்றும் சிவசுப்பிரமணியம் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
திசைகள் டிவி செய்தி ஊடகத்தை நடத்துவது வீராசாமி பெருமாள் என்பவர் என்றும் அவர் தமிழ் மணி என்ற புனைப் பெயரையும் கொண்டவர் என்றும் சிவசுப்பிரமணியம் தனது புகாரில் தெரிவித்தார்.
வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு காணொலி செய்திகளும் மஇகா கட்சியின் தோற்றத்தை அவமதிக்கும் வகையிலும், அதன் உறுப்பினர்களை சிறுமைப்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனவே, காவல் துறையினர் விரைந்து விசாரணைகள் நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சிவசுப்பிரமணியம் தனது புகாரில் வலியுறுத்தியிருக்கிறார்.
ச்ச்ச்ச்

