ஜொகூர், ஆகஸ்ட் 11:
தற்போதைய கோவிட்-19 காலகட்டத்தில், சிறு தொழில் செய்யும் வணிகர்கள் மிகுந்த பாதிப்பில் இருக்கிறார்கள். முடங்கிக் கிடக்கும் அவர்களது சிறு தொழிலை மீண்டும் தொடங்க இயலாமல் தத்தளிக்கிறார்கள்.
இதனை உணர்ந்து ஜிக்கி எனப்படும் ஜொகூர் இந்திய வர்த்தகச் சம்மேளனம் அவர்களுக்கு உதவ புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
ஜிக்கியில் பெரிய அள்வில் தொழில் செய்யும் வணிகர்கள் மட்டுமல்லாமல், சிறு தொழில் வியாபாரிகளும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முதல் கட்ட முயற்சியாக உறுப்பியம் பெற்ற சிறு வியாபாரிகளுக்கு, வட்டி இல்லாமல் கடன் வழங்கும் திட்டத்தை ஜிக்கி தற்போது வகுத்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஜிக்கியின் தலைவர் டான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தனது சொந்தப் பணமாக 25 ஆயிரம் வெள்ளியும், ஜிக்கி 25 ஆயிரம் வெள்ளியும் ஒதுக்கியுள்ளதாக ஜிக்கியின் செயலாளர் டத்தோ கிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செயலவையில் பேசப்பட்டு தற்போது இந்தத் திட்டத்திற்காக 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் நல்லமுறையில் வெற்றிபெற்றால் அடுத்த கட்ட கடன் உதவிக்கு இதே போல் ஜிக்கி தலைவர் டான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் பாதி தொகையைச் செலுத்துவதோடு, ஜிக்கி பாதி தொகையை ஒதுக்கும் என டத்தோ கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
சிறு வியாபாரிகளுக்கு நாங்கள் கொடுக்கும் வட்டி இல்லா கடன், இந்த கோவிட்-19 காலகட்டத்தில் அவர்கள் தொழிலை கைவிடாமல் தொடர்வதற்கு ஊக்குவிக்கும். காரணம் தொழில்முனைவர்களை உருவாக்குவதே ஜிக்கியின் முதன்மை நோக்கமாகும். இந்தக் காலகட்டத்தில் சிறு வியாபாரிகள் தொழிலைக் கைவிட்டுவிட கூடாது என்பதற்காகவே இந்தச் சிறிய முயற்சியை ஜிக்கி மேற்கொண்டு உள்ளது என டத்தோ கிருஷ்ணன் தெரிவித்தார்.

