கோலாலம்பூர் | 16/8/2021 :-
தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் பிரதமர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி அரசாங்கம் கலைந்தது. இதன் தொடர்ச்சியாக நாளை அரசியல் கட்சிகள் மாமன்னரைச் சந்திக்கவிருக்கின்றன.
இது வரையில் அம்னோ, பாஸ், ஜ.செ.க. பெஜுவாங் ஆகிய 4 கட்சிகள் நாளை மாமன்னரைச் சந்திப்பதை உறுதி செய்துள்ளன.
கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி நாளை மாலை அரண்மனைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என அம்னோவின் துணைத் தலைவர் முகம்மட் ஹசான் தெரிவித்தார்.
இதனிடையே, பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாளை மாமன்னரைச் சந்திப்பதை அக்கட்சியுன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், பெஜுவாங் கட்சியின் தலைவர் முகிர்ஸ் மகாதீருக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு வந்திருப்பதாக அக்காட்சியில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
மேலும், ஜ.செ.க.வுக்குத் தொடர்புடைய ஒருவர் அதே தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜ.செ.க. – பெஜுவாங் ஆகிய கட்சிகளின் நிகராளிகள் மாமன்னரை பிற்பகல் 2.00 மணிக்குச் சந்திக்கவிருப்பதாக அக்கட்சிகளில் இருந்து வந்த தகவல் கூறுகின்றன.
இச்சந்திப்பில் மக்களவைத் தலைவர் அஸார் ஹாருனும் மேலவைத் தலைவர் ரயிஸ் யாதிமும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலவைத் தலைவர் ரயிஸ் யாதிமுக்கு நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தான் ஶ்ரீ ரயிஸ் யாதிமுக்கு அரண்மனையில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

