Site icon அநேகன்

பந்திங் டுசுன் டுரியான் தோட்ட முன்னாள் பாட்டாளி குடும்பகளின் வீட்டு வசதி, நீர், மின்சார பிரச்சினை: தீர்வு காண மந்திரி பெசார் முனைப்பு !

இடைக்கால மின்சார தேவைக்காக மாநில அரசு சார்பில் ஜெனரேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டது.
டாக்டர் ஜி. குணராஜ் தகவல்

பந்திங் | 12/12/2021 :-

டுசுன் டுரியான் தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் நீண்ட காலமாக வீட்டு வசதி சிக்கலை எதிர்கொண்டுவரும் வேளையில் தற்பொழுது மின்சாரப் பிரச்சினையையும் எதிர்நோக்குவதால் இதற்கெல்லாம் உரிய முறையில் தீர்வு காண மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்றும் மின்சாரத் தேவைக்கு தற்காலிகத் தீர்வாக, மாநில அரசு சார்பில் ஜெனரேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 10-ஆம் நாள் தோட்ட மக்களை நேரில் சந்தித்தபின் அவர் இவ்வாறு கூறினார்.

பந்திங் பட்டணத்தை ஒட்டியுள்ள டுசுன் டுரியான் தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து வீட்டு வசதி சிக்கலை எதிர்நோக்கிவரும் வேளையில் அண்மைக் காலமாக மின்சார வசதியும் நிறுத்தப்பட்டு மேலும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றநர்.

இந்த சூழ்நிலையில், சிலாங்கூர் மந்திரி பெசாரின் இந்திய சமூக நல சிறப்பு ஆலோசகரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜி. குணராஜ், சம்பந்தப்பட்ட தொழிலாளர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் களையும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்தத் தோட்டத்தை தற்பொழுது நிர்வகித்துவரும் நிறுவனமும் மத்தியக் கூட்டரசின் நிதி நிருவாக அமைப்புமான பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின்(பிஎன்பி) அதிகாரிகள், தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் (டிஎன்பி) அதிகாரிகள், மோரிப் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 28-இல் இதன் தொடர்பில் மந்திரி பெசாரின் அலுவலகத்தில் பரிசீலனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டுசுன் டுரியான் தோட்ட உரிமையாளரான பிஎன்பி அதிகாரிகளும் தோட்டத்தின் முன்னாள் உரிமையாளரான சைம் டார்பியைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது, முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் 20 பேரின் குடும்பங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்ட மின்சார சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனி மீட்டர் பொருத்துவது குறித்தும் டிஎன்பி அதிகாரிகளுக்கு நில உரிமையாளரான பிஎன்பி சார்பில் ஒப்புதல் வழங்க கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்ப்பட்டது.

டுசுன் டுரியான் தோட்ட முன்னாள் பாட்டாளிகள் சந்தித்துவரும் இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு சீராகவும் உள்ளடக்க முறையிலும் தீர்வு காண முனைப்பு காட்டும் மாநில அரசுக்கு இசைவாக ஆக்ககரமான முறையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் டிஎன்பி மற்றும் பிஎன்பி அதிகாரிகளுக்கும் பிரச்சினையை சந்தித்து வந்தாலும் பொறுமைகாத்துவரும் பாட்டாளிக் குடும்பத்தினருக்கும் மந்திரி பெசார் சார்பில் நன்றி தெரிவிப்பதாக மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான ஜி.குணராஜ் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டுசுன் டுரியான் தோட்ட முன்னாள் பாட்டாளிகளின் பிரதிநிதி கருணாகரன் அண்ணாவி, இதன் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுடைமைப் பிரச்சனை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது என்றார். இதற்கிடையில், மின்சாரமும் இல்லாமல் தோட்டக் குடியிருப்புவாசிகள் அல்லல்பட்டுவந்த நிலையில் அதற்கும் நல்ல முறையில் தீர்வு காண்பதற்காக ஆதரவு வழங்கும் மாநில அரசுக்கும் மந்திரி பெசாருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளை இந்தப் பிரச்சினையை மந்திரி பெசாரின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் செந்தோசா மக்கள் பிரதிநிதி குணராஜ் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கோல லங்காட் மாவட்ட மன்ற முன்னாள் உறுப்பினரும் பிகேஆர் கோல லங்காட் தொகுதி முன்னாள் துணைத் தலைவருமான கருணாகரன் சொன்னார்.

இதற்கிடையில், கோல லங்காட் மாவட்ட மன்ற உறுப்பினரும் வட்டார பிகேஆர் தலைவருமான ஹரிதாஸ், டுசுன் டுரியான் தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பி அதிகாரிகள், பிஎன்பி அதிகாரிகள், மேம்பாட்டு நிறுவனமான செந்தோரியா பெர்ஹாட்டின் அதிகாரிகள் ஆகிய தரப்பினருடன் நல்லுறவைப் பேணி வருவதுடன், அவர்களின் மூலம் தோட்ட மக்களுக்கு தேவையான அணுகூலங்களை தொடர்ந்து பெற்று வருகிறார்.

ஜெனரேட்டர் மூலம் பெறப்படும் மின்சார வசதி மாலை 6:00 முதல் காலை 6:00 மணி வரை மட்டும் என்பதால், பகல் நேர மின் தேவைக்காக சூரியக் கதிர் மூலம் செயற்கை மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதன்மூலம் இந்த 20 குடும்பங்களும் பகல் நேரத்தில் மின்சார வசதி பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்று ஹரிதாஸ் கூறினார்.

Exit mobile version