ஈப்போ | 13/12/2021 :-
நிதிச் பிரச்சனை, தனிப்பட்டப் பிரச்சனை, குடிபோதை, விவாகரத்து ஆகியன கோவிட்-19 காலத்தில் பேரா மாநிலத்தில் ஏற்பட்ட குடும்ப வன்முறைக்குக் காரணமாக இருப்பதாக இன்று பேரா மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய பேரா மாநில மகளிர், குடும்ப, சமூக நலம், அரசு சாரா இயக்கங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் வான் நோராஷிக்கின் வான் நோர்டின், காவல் துறையின் புள்ளிவிவரப்படி கடந்த மார்ச் 2020 முதல் அக்தோபர் 2021 வரையில் 551 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், 133 வழக்குகள் பேரா மாநில சமூக நல மேம்பாட்டு திணைக்களத்தின் வசம் வந்திருப்பதாகவும் சொன்னார்.
கடந்த 2020 முதல் நவம்பர் 2021 வரையில் பேரா மாநில சமூக நல மேம்பாட்டு திணைக்களத்தில் பதிவாகிய குடும்ப வன்முறை வழக்குகள்
- கிந்தா : 39
- லாருட் மாத்தாங், செலாமா : 22
- மஞ்சோங் ; 21
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக பேரா மாநிலத்தில் பதிவாகியுள்ள வழக்குகளும் அதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெமெங்கோர் சட்டமன்ற உறுப்பினர் சால்பியா முகம்மட் எழுப்பியக் கேள்விக்கு வான் நோராஷிக்கின் அவ்வாறு பதிலளித்தார்.
காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள கற்பழிப்பு, சிறார் பாலியல் தொந்தரவு ஆகியன குறித்த 311 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் கற்பழிப்பு 144, பாலியல் வன்முறை 22 ஆகும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரா மாநில சமூக நல மேம்பாட்டு திணைக்களம் ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதாகவும் தேவை இருப்பின், அவர்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அவர் சொன்னார்.

