கோலாலம்பூர் | 14/12/2021 :-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெர்க்கேசோ வாயிலாக புத்ரா உலக வாணிப மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தை உருவாக்கக் கூடிய முயற்சி நடைபெற்றது என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அதன் தரத்தினில் குறைவதுண்டோ ?
அங்கத்திலே ஒரு குறையிருந்தால் அன்பு குறைவதுண்டோ
எனும் கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப, மாற்றுத் திறனாளிகளையும் அன்போது தொழில் துறைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை பெர்கேசோ வாயிலாகச் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 90 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். கோவிட்-19 காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் மாற்றுத் திறனாளிகளும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மாற்றுத் திறனாளிகளும் இந்த சமுதாயத்தின் ஓர் அங்கம். மலேசியக் குடும்பம் எனும் கோட்பாட்டின்கீழ் அவர்களையும் பாதுகாக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை, அதற்கேற்ப இந்த வேலை வாய்ப்புத் திட்டம் அரங்கேறியது என அவர் சொன்னார்.
நாடு முழுவதும் அனைவருக்குமான வேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் 40 வயதுக்கு மேற்ப்பட்டவர்களும் இத்திட்டம் உருவாக்கத்தின்போது கவனத்தில் கொள்ளப்படுவர்.
இந்த முயற்சியால் நிறைய மாற்றுத் திறனாளிகள் பயனடைவார்கள் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
மேலும், ஆள்பல பற்றாக் குறையை எதிர்நோக்கும் நிறுவனங்களும் இவர்கள் போன்றவர்களை அடையாளம் கண்டு வேலைக்கு அமர்த்தினால், நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார மந்த நிலையில் இருந்தும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து மிக விரைவில் மூட்சி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

