கோலாலம்பூர் | 14/12/2021 :-
கோவிட்-19 பெருந்தொற்றால் மலேசியா, சி ங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் அனைத்துலக எல்லைகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்புதலில் 29 நவம்பர் முதல் மலேசியா – சிங்கப்பூர் எல்லை திறக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம், சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்களின் வேலையினை சிங்கப்பூரில் இழந்து தவித்திருந்தனர். அதே சமயம், அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழலும் இருந்து வந்தது,
இவ்வாறானச் சூழலில் இரு நாடுகளிலும் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 79.7 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.8 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம், சிங்கப்பூர் மக்கள் தொகையில் 94 விழுக்காட்டினர் தடுப்பூசியைச் செலுத்தி விட்டனர்.
இவர்களுக்காக, சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கானப் பயணத் திட்டம் தொடங்கும் இன்று தொடங்குகிறது
இது குறித்து மலேசியர்கள் பலர் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
“கோவிட்-19 காரணமாக வெகு நாட்கள் முடங்கியே இருந்த பிறகு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக இரு குடும்பத்தைப் பிரிந்து பணி காரணமாக சிங்கையிலேயே தவித்திருக்கும் மலேசியர்களுக்கு இஃது ஒரு பொன்னான வாய்ப்பு. 18 மாதங்களாக இணைய வழி கைப்பேசி அழைப்பில் மட்டுமே குடும்ப உறவுகளைப் பார்த்திருந்த நிலை மாறி இன்று முதல் நேரடியாகச் சந்திக்க முடியும்.”
மேலும், மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்லவும் இத்திட்டம் வழி வகை செய்வதால் இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான் என ரவாங் பகுதியைச் சேர்ந்த மைத்திரேயர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
“சிங்கப்பூருக்கான மலேசியாவின் நுழைவாசல் ஜோகூர் மாநிலம். அம்மாநிலம் வழி பயணம் ஒரு பக்கம் இருந்தாலும், ஜோகூருக்குப் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இங்குள்ள வர்த்தகம் செழிக்கும். முடங்கியப் பல வியாபாரங்கள் மீண்டும் இயங்க இந்த எல்லைத் திறப்பு முக்கியப் பங்கு வகிக்கும்”
பல காலமாகக் கலையிழந்து இருக்கும் ஜோகூர் பாரு மீண்டும் கலை கட்டும் எனத் தாம் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார் ஜோகூரில் கால் நடை வளர்ப்புத் துறையில் ஈடுபட்டு வரும் ஷாமினி மனோகரன்.
இரு நாடுகளின் எல்லைப் பாதை திறக்கப்படுவதில் பல நன்மைகள் இருந்தாலும், கோவிட்-19 நோய் இன்னும் முழுதாய் நீங்காதக் காரணத்தால் அனைவரும் தங்களின் சொந்தக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறுகிறார் பேக்கரி ஊழியர் அட்சன் தாஸ்.
“தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இத்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. எனவே, பொருளாதாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு சுகாதாரமும் முக்கியம். முகக்கவசத்தை சரியான முறையின் அணிந்து பாதுகாப்பாகப் பயணம் செய்ய வேண்டும்.”
விமானப் பயணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான தரைவழிப் பயணத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1,440 பேர் சிங்கப்பூர் ஊட்லண்ட்ஸ் வழியாக மலேசியாவுக்குச் செல்லலாம், திரும்பலாம்.
இரு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்களிலும் சிங்கப்பூரில் இருந்து மொத்தமாக 6 விமானங்கள் நாள் இன்றுக்குத் தரையிறங்க உள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கானப் பயணத்திட்டத்தின்கீழ், சிங்கப்பூருக்கு வருபவர்கள் ஏழு நாள் தனிமை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் சிங்கப்பூரும் மலேசியாவும் நல்ல முன்னேற்றத்தைச் சாதித்து இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் எல்லை கடந்த பயணங்களைக் கட்டம் கட்டமாக தொடங்குவதற்கு இது தக்க தருணமாக இருக்கிறது என்றாரவர்.
இதன் மூலம் இரு நாட்டுப் பொருளாதாரத்திற்கும் புத்துயிர் கிடைக்கும். மக்களுக்கு இடையேயான உறவு மீண்டும் வலுபெறும் என்று அவர் தெரிவித்தார்.

