Site icon அநேகன்

மலேசியாவில் 2வது ஓமைக்ரோன் சம்பவம் ! – 8 வயது சிறுமிக்குப் பாதிப்பு !

கோலாலம்பூர் | 16/12/2021 :-

மலேசியாவில் 2வது ஓமைக்ரோன் சம்பவம் கண்டறியப்பட்டது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நைஜிரியாவில் இருந்து மலேசியாவுக்கு வந்த 8 வயது சிறுமிக்கு அந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது என அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், மேலும் 18 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டிருக்கலாம் எனவும் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

நாளை அது குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

ஓமைக்ரோன் தொற்று கண்ட அந்த சிறுமி, லாகோஸ், நைஜிரியாவில் உள்ளத் தமது குடும்பத்தாருடன் தங்கியிருந்தார்.

மலேசியாவுக்கு வரும் முன் அச்சிறுமியும் அவருடைய தங்கையும் RT-PCR பரிசோதனையை மேற்கொண்டதாகவும் அதில் தொற்று கண்டிருக்கவில்லை எனும் முடிவு கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

இம்மாதம் 5 ஆம் நாள் அவர் மலேசியா வந்தடைந்தார்.

ஆனால், மலேசியா கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் RT-PCR பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

ஒரு வாரம் பிறம், 14 ஆம் நாள் ஓமைக்ரோன் தொற்று கண்டறியப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்று கண்டுள்ள அந்தச் சிறுமிக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அவர் கடந்த 7 ஆம் நாள் முதல் 14 நாட்களுக்குத் தமது வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்வார்.

முதல் ஓமைக்ரோன் தொற்று கடந்த நவம்பர் 3 ஆம் நாள் 19 வய்யது வெளிநாட்டு மாணவருக்கு மலேசியாவில் கண்டறியப்பட்டது.

Exit mobile version