கார்டோம் | 3/1/2021 :-
சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் பதவி விலகி உள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக அப்தல்லா ஹம்டோக் பேசும்போது, இப்பதவி விலகலால் மற்றொருவருக்கு தேசத்நாட்டை தை வழிநடத்தும் வாய்ப்பை வழங்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
விரிவடைந்து வரும் இடைவெளியைக் குறைப்பதற்கும் அரசியல் சக்திகளுக்கு இடையேயான சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் அந்நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.
இப்போது, சூடான் ஓர் ஆபத்தான திருப்பு முனையை கடந்து கொண்டிருக்கிறது, எனவே, அஃது அவசரமாக சரிசெய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அவரது பதவி விலகலானது பாதுகாப்பு, பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சூடானை அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சூடானில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு இராணுவத்தையும் அரசியல் தலைவா்களையும் பிரதிநிதிகளாகக் கொண்ட இறையாண்மை மன்றம் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.
இடைக்கால பிரதமராக அப்தல்லா ஹம்டோக் பொறுப்பேற்றாா்.
கடந்த அக்தோபர் மாதம் 25-ம் நாள், சூடான் இராணுவம் அந்த இடைக்கால அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
மேலும், அப்தல்லா ஹம்டோக்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, நாட்டில் அவசர நிலையை அறிவித்தது.
இதற்கிடையே, இராணுவம், அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் குழுக்கும் முன்னாள் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இதனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த சூடான் இராணுவம் ஒப்புக்கொண்டது. இதனால் அங்கு நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்போது பதவி விலகி உள்ளார்.

