Site icon அநேகன்

புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் இலவச மதிய உணவு திட்டம் !

கோலாலம்பூர் | 4/1/2021 :-

    பரிவுமிக்க சமுதாய கோட்பாட்டிற்கு ஏற்ப அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பு இலவச மதிய உணவு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

    தலைநகர் , சிகாம்புட்,  கம்போங் கோலாம் ஆயர் பகுதியைச்  சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பு நேற்று தொடங்கி ஒரு மாதத்திற்கு மதிய உணவை வழங்கவிருப்பதாகக் கூறப்பட்டது.

    அவ்வகையில் திங்கள் தொடங்கி வெள்ளி வரை தினசரி 100 பாக்கெட் உணவு பொட்டலங்கள் இப்பகுதி வாழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் தோற்றுனர் டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு இந்த அமைப்பினர் நேரில் வருகை மேற்கொண்டபோது தங்களின் சிரமங்களை இவர்கள் எடுத்துரைத்ததோடு சிலர் அனைத்து உடைமைகளையும் வெள்ளத்தில் பறிகொடுத்தது வேதனையைத் தந்ததாகவும் அவர் விவரித்தார்.

    “இவர்களை நான் சந்தித்துப் பேசியபோது தங்களுக்கு நிதியுதவி தேவையில்லை. மாறாக, மெத்தை, தலையணை போன்ற அடிப்படை பொருட்களே தேவை என்று கூறினர்” என்றார் டாக்டர் செல்வேந்திரன்.

    வெள்ளப் பேரிடரில் தளவாடப் பொருட்கள், மின்சார சாதனங்கள், சோபா, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி போன்றவை சேதமுற்றதாக அக்குடியிருப்பாளர்களை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

    “இவர்களின் நிலைமையைக் கேட்டறிந்த பின்னர் மெத்தை, தலையணை போன்றவற்றோடு சில மின்சார சாதனங்களையும் இவர்களுக்கு அன்பளிப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த இக்கட்டான நிலையில் இருந்து இவர்கள் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கு இவை உதவும்” என்றார் அவர்.

   அதே வேளையில், இம்மாத இறுதி வரை தாங்கள் வழங்கும் மதிய உணவு இவர்களுக்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என்று தான் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான மன வலிமையை இறைவன் தருவதோடு இதில் இருந்து  இவர்கள் விரைவில் மீண்டு வளம் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version