கோலாலம்பூர், ஆக. 1-
நாட்டிலுள்ள அரசுசாரா இயக்கங்களை, நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்புகளாக மட்டுமே பார்க்கக்கூடாது. வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக அவர்களை மாற்ற வேண்டுமென எஸ்பி கேர் குழுமத்தின் உரிமையாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.
நாட்டிலுள்ள இந்திய அரசுசாரா இயக்கங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சந்திப்பு நடத்தினார். அதில் உரையாற்றிய டாக்டர் சத்தியபிரகாஷ் இவ்வாறு கூறினார்.
அரசு சாரா இயக்கங்கள் எப்போதுமே அரசாங்கத்தை நம்பி இயங்கக்கூடிய நிலையில் இருக்கக்கூடாது. மாறாக அவர்களை வர்த்தகச் சமுகமாக மாற்ற வேண்டியது காலத்தில் கட்டாயமாக உள்ளது. இத்தருணத்தில் பொருளாதாரப் பலம் மிக்கவர்களால் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட முடிவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால், அரசுசாரா இயக்கங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அடையாளம் காண வேண்டும். மீனை வாங்கிக் கொடுப்பது மட்டும் நமது வேலையல்ல. மீனை எப்படிப் பிடிக்க வேண்டுமென்பதையும் நாம்தான் சொல்லி கொடுக்க வேண்டுமென்றார்.
அரசு சாரா இயக்கங்கள் வர்த்தகச் சமுகமாக மாறினால், அவர்கள் அரசாங்கத்தின் உதவியை நாடாமல் மக்களுக்கு நேரடியாக உதவ முடியும். இம்மாதிரியான செயல்திட்டங்கள் தொடர்ந்தால் மக்களுக்கு நம்மீது மகத்தான நம்பிக்கை பிறக்கும் என டாக்டர் சத்தியபிரகாஷ் வலியுறுத்தினார்.
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றால் இந்திய சமுதாயத்தின் தலையெழுத்து மாறிவிடுமென ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகப் பல்வேறான திட்டங்களை அன்வார் கொண்டுள்ளார். அதனைச் செயல்படுத்துவதற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கினால்தான் அவரால் நமது சமுதாயம் எத்தகைய மாற்றத்தை காண்கின்றது என்பதை நாமே உணர்ந்து கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசுசாரா இயக்கங்களில் தலைவர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தார்கள். இதில் அரசுசாரா இயக்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களைக் கலந்து கொண்டார்கள்.

