Site icon அநேகன்

அரசாங்கத்தின் கடனுதவி திட்டங்கள் சிறு தொழில் வர்த்தகர்களைச் சென்றடைய வேண்டும்! – ரவீந்திரன் வலியுறுத்து

கோலாலம்பூர்,ஏப்.22-

     அரசாங்கத்தின் கடனுதவி திட்டங்கள் வழி இந்திய சிறு தொழில் வர்த்தகர்கள் பயனடைய வேண்டும் என்று மலேசிய  இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் (மிஸ்பா) தலைவர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

     இந்தியர்களில் அதிகமானோர் பல்வேறு வகையான வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலோர்  சிறு  தொழில் வர்த்தக சங்கத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பிரச்னை என வரும்போது மட்டுமே இதுபோன்ற சங்கத்தை இவர்கள் நாடுகின்றனர். பலர் இலவசமாகப் பெற வேண்டிய சேவைக்காக ஏமாற்றுக்காரர்களிடம் பணத்தை இழக்கின்றனர்.

     இதுபோன்ற சூழ்நிலையைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டதே மிஸ்பா. இந்திய சிறு தொழில் வர்த்தகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதே இச்சங்கத்தின் தலையாய நோக்கம் என்றார்.

     அவ்வகையில் சங்கத்தின் முதலாவது கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பிரிக்ஃபீல்சில்  நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர் தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு வாயிலாக  சிறு தொழில் வர்த்தகர்களுக்கு பேங்க் ராக்யாட் வழங்கும் வட்டியில்லா கடனுதவி திட்டம், வாகனம் வழி உணவு விற்பனை திட்டத்தில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள், மித்ரா நிதி உட்பட  அமைச்சுகள் வழங்கும் கடனுதவி வாய்ப்புகள் பற்றி ரவீந்திரன் பங்கேற்பாளர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

     பேங்க் ராக்யாட் வழி வர்த்தகர்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்வார்களேயானால் அதற்கு சங்கம் பரிந்துரை செய்யும். எவ்வளவு தொகை, அந்தக் கடனுதவி அங்கீகரிக்கப்படுமா என்பது வங்கியைப் பொறுத்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்,

     ஒற்றுமையே பலம் என்பதற்கொப்ப அதிகமான சிறு தொழில் வணிகர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர வேண்டும். அப்போதுதான் சங்கம் வலுப்பெற்று நமது கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்குத் துணை புரியும் என்றார்.

     இது தவிர, சிறு வணிகர்கள் வட்டி முதலைகளிடம் சிக்காமல் தடுப்பதற்கு 20 பேர் அடங்கிய குழுவை அமைத்து ஒருவருக்கொருவர் உதவும் திட்டத்தையும் சங்கம் கொண்டிருப்பதாக ரவீந்திரன் குறிப்பிட்டார்.

     “இது சங்கத்தின் முதலாவது கூட்டம். இதன் அலுவலகத்தை தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதே வேளையில், நாடு முழுமையும் இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும் எங்களின் இலக்காகும்” என்று அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version