உலு லங்காட், மே 16-
கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவம் மற்றும் சிந்தாந்தத்திற்கு ஏற்ப உலு லங்காட் தொகுதிக்கு புது உத்வேகத்தை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்தும் முயற்சியில் அதிகவனம் செலுத்தவிருப்பதாக ராஜன் முனுசாமி தெரிவித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் கெஅடிலான் கட்சியில் இணைந்த ராஜன் முனுசாமி 2022—2025 தவணைக்கான கட்சித் தேர்தலில் உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள களம் இறங்குகிறார்.
வர்த்தக துறை பட்டதாரியான இவர் 2018 தொடங்கி 2020 வரை குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சரின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி இளைஞர் பிரிவு தலைவர், தொகுதி துணைத் தலைவர், தலைவர் ஆகிய பதவிகள் வாயிலாக இவ்வட்டார இளைஞர்கள் உட்பட மக்களுக்கு பல்வேறு வகையான நற்சேவைகளை ஆற்றியுள்ளார்.
காஜாங் நகராண்மைக்கழக உறுப்பினராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் நிலவிய கால்வாய், திடல், விளையாட்டுப் பூங்கா போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இவர் தீர்வு கண்டுள்ளார்.
இது தவிர்த்து மக்கள் குறிப்பாக இவ்வட்டார இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் சார்ந்த விவகாரங்களைத் தீர்த்து வைத்து அவர்களின் மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பை வழங்கியுள்ளார். மாநில அரசாங்கம் வழங்கி வரும் ஹிஜ்ரா கடனுதவி மூலம் பல சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பொருளாதார மேன்மைக்குத் துணை புரிந்ததும் இவற்றில் அடங்கும்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள்பால் அதிக அக்கறை கொண்ட ராஜன் முனுசாமி செமினி வட்டார பள்ளிகளான செமினி தமிழ்ப்பள்ளி, ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி மற்றும் டொமினியன் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றிக்கு பல்வேறு உதவிகள் புரிந்துள்ளார்.
அதே சமயம், செமினி மற்றும் உலு லங்காட் வட்டாரத்தில் உள்ள ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கியதன் வழி ஆலய விவகாரங்கள் மீதும் இவர் கவனம் செலுத்தியது தெரிய வருகிறது.
கோவிட்- 19 பெருந்தொற்று ,செமினி, லங்காட், உலு லங்காட் தாமான் ஸ்ரீ நண்டிங் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரின்போது பணிக்குழுவை அமைத்து வட்டார மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதியுதவியை வழங்கியது, வீடுகளைத் தூய்மைப்படுத்தி அவர்களின் சுமையைக் குறைத்ததிலும் இவருக்குப் பெரும் பங்குண்டு.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயனடையும் பொருட்டு வட்டார மக்கள் இவரை நாடி இவரின் அலுவலகத்திற்கு வருவர். இத்தொகுதியின் தலைவராகத் தான் வெற்றி பெற்றால் மேலும் பல ஆக்கப்பூர்வ செயல்களை இவ்வட்டார மக்களுக்காகச் செய்யக் காத்திருப்பதாக ராஜன் முனுசாமி மேலும் கூறினார்.
இதன் பொருட்டு எண் 2 ஐக் கொண்டு போட்டியிடும் தனக்கு இத்தொகுதி கெஅடிலான் உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பர் என்று தான் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக அவர் சொன்னார். மே 18 முதல் 20 வரை இணையம் வாயிலாகவும் மே 21 ஆம் தேதி காலை 9.00 தொடங்கி மாலை 4.00 வரை செமினி சமூக மண்டபத்திலும் வாக்களிப்பு நடைபெறும்.

