Site icon அநேகன்

நம்மை உலகத்திற்குக் காட்டியவள் தாய் என்றால், உலகத்திற்கு நம்மைக் காட்டியவர்கள் ஆசிரியர்கள்!

“வளமிக்க பள்ளிக்கு ஆசிரியரே ஆணிவேர்” எனும் இவ்வாண்டின் ஆசிரியர் தினக் கருப்பொருக்கேற்ப பள்ளி எனும் ஆலமரம் தலைத்தோங்க ஆசிரியர்களே அதன் ஆணி வேராய் செயல்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் கல்வி, கட்டொழுங்கு, தன்னாற்றல் என அனைத்துத் திறன்களிலும் மேம்பாடு காண ஆசிரியர்கள் நேர கால வரையறையின்றி மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர் என்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் எனும் வெற்றி வேற்கைக்கேற்ப கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். இறைவன் வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமின்றி, எல்லா உயிர்களுக்கும் தம் அருளை வாரி வழங்குவதைப் போல, ஆசிரியர்களும் தம்மிடம் ஒப்படைக்கப்படும் அனைத்துப் பிள்ளைகளையும் தமது சொந்தக் குழந்தைகளாய் ஏற்றுக் கொண்டு, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, அணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து, பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி ஒரு முழுமையான மனிதனாய் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.

இவ்வாறு தாம் உருவாக்கிய மாணவன் தம்மைவிட உயர்ந்த நிலையை அடைந்தாலும் பொறாமை கொள்ளாது இவன் என் மாணவன் என நெஞ்சுயர்த்தி பெருமையாய்ச் சொல்பவர்தான் ஆசிரியர்கள் என, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினைப் பெருமிதத்தோடு நினைவு கூர்கிறார் மஇகாவின் தேசியத் தலைவரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான மாண்புமிகு தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.

ஒரு சமுதாயம் வளம்பெறவும் ஒரு நாடு மேம்பாடு காணவும் கல்வி ஒன்றே முக்கிய ஆயுதமாக இருக்கின்றது. கல்வி ஒன்றினால் மட்டுமே நாம் வாழ்வில் ஏற்றம் காண முடியும். நமது இலட்சிய சிகரத்தை எட்டித் தொட முடியும்.

அத்தகைய பெருஞ்செல்வமான கல்விச் செல்வத்தை மாணவர் மனத்தில் வித்திடுவதோடு அம்மாணவரின் அறிவுநிலை, எண்ணங்கள், குடும்பச் சூழல் என அனைத்தையும் புரிந்து கொண்டு, ஆசு இரியராய்…அவர்களிடம் காணப்படும் குற்றங் குறைகளைக் கண்டறிந்து திருத்தி நல்வழிப்படுத்தும் ஓர் உன்னத பணியினைச் சேவையினைச் செய்யும் ஆசிரியர்களை நான் அனைவரும் மனதார பாராட்டியே ஆக வேண்டுமென மாணவ சமுதாயத்திற்கு யாதுமாகப் போன ஆசிரியர்களின் தியாகத்தை உணர்ந்த மாணவராய் தமது ஆசிரியர் தின வாழ்த்துகளை ஊடகத் துறைக்கு அளித்துள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார், மாண்புமிகு தான்ஸ்ரீ விக்கேஸ்வரன்.

மாணவரின் வளர்ச்சியே ஒரு பள்ளியின் வளர்ச்சி! பள்ளிகளின் வளர்ச்சியே சமுதாயத்தின் வளர்ச்சி! ஆக, பள்ளியின் மேம்பாட்டிற்கு மட்டுமல்லாது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ஆணி வேராக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் விரும்பும் ஆசிரியர்களாக விளங்குவதற்காகப் பல பெரும் சுமைகளை ஏற்று, சில வேளைகளைத் தங்களது விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்து மாணவர்களுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி, அவர்களை வழிநடத்திவரும் ஆசிரியர்களை என்றென்றும் போற்ற வேண்டும்!

சொல் உளி கொண்டு, மாணவரின் உள் ஒளி செதுக்கிக், கல்லும் உடையாமல் சிலையும் சிதறாமல் மாணவச் சிற்பங்களைச் செதுக்கும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும், தமது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, மாண்புமிகு தான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மிகவும் நெகிழ்ச்சியோடு கூறினார்.

Exit mobile version