Site icon அநேகன்

திறன்மிக்க மலேசிய இளைஞர்களை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சு ஜப்பானுடன் ஒப்பந்தம்

மலேசிய இளைஞர்களைக் குறிப்பாக தொழில்திறன் பயிற்சி பெற்று, ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் முயற்சியில் ஜப்பானிய அரசாங்கத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களும், ஜப்பானிய நீதி அமைச்சர் யோஷிஹிசா ஃபுருகாவா அவர்களும் கையொப்பமிட்டனர்.

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதன்வாயிலாக மலேசிய இளைஞர்கள் தங்களின் தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ள ஜப்பானில் சம்பளத்துடன் கூடிய பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளும் இளைஞர்கள் அனைவருக்கும் முறையாக ஜப்பானிய மொழிப் பயிற்சியும் வழங்கப்படும். ஜப்பானிய மொழியில் குறைந்தபட்ச புரிதல் பெற்ற பின்னரே இந்த சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பினைப் பெற முடியும்.

இந்தத் திட்டம் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய, ஒரு கூட்டுக் குழு அமைக்கப்படும். மலேசிய மனிதவள அமைச்சு இந்த கூட்டுக் குழுவின் அங்கமாகத் திகழும்.

ஜப்பானில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்றுவதன் மூலம் மலேசியர்களால் நல்ல அனுபவத்தையும் தொழில்சார்ந்த நிபுணத்துவத்தையும் பெற முடியும் எனும் நம்பிக்கையை மனிதவள அமைச்சர் தெரிவித்தார்.

இதைத்தவிர, திறமையான தொழிலாளர்களுக்கு அதிக ஊதியங்களை வழங்கும் ஒரு நாடாக ஜப்பான் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மலேசியாவின் திறமையான தொழிலாளர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

Exit mobile version