கோலாலம்பூர், ஜூன் 1-
பரதநாட்டிய துறையில் புரிந்த அரிய சாதனைக்காக சிலாங்கூர்,பத்து கேவ்ஸைச் சேர்ந்த கலைவாணன் உலக கின்னஸ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
விஹாரா டக்க்ஷாரா நுண்கலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி மலேசியா 2021 நிகழ்ச்சியில் படைத்த பரதநாட்டியத்திற்காக இவர் உலக கின்னஸ் விருதைப் பெற்றார்.
மங்களம், புஸ்பாஞ்சலி, கணபதி கௌத்துவம், சண்முக கௌத்துவம், நடேச கௌத்துவம் முதலிய கீர்த்தனைகளுக்காக கலைவாணன் வழங்கிய நாட்டியம் இவரை இந்த உயரிய விருதுக்குத் தகுதி பெறச் செய்தது.
கடந்த டிசம்பர் மாதம் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட இந்த நாட்டிய நிகழ்ச்சியை உலகளாவிய கலை ரசிகர்கள் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 ஆண்டுகளாக சுற்று வட்டார மாணவர்களுக்கு பரதக் கலையைக் கற்பித்து வரும் கலைவாணன் இத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் இலக்கைக் கொண்டுள்ளார்.
கலைவாணனின் விருதளிப்பு நிகழ்ச்சியில் இவரின் தாயார் கே.பரிமளாவும் கலந்து கொண்டார். பரிமளா மஇகா செலாயாங் மக்மோர் கிளைத் தலைவர் ஆவார்.

