செந்தூல், ஜூன் 1-
இந்தியத் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி (வயது 102) நேற்று காலமானார்.
அவரின் சேவையைப் பாராட்டிக் கடந்த ஆண்டு மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் அவரை கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதுமை காரணமாக சில நாட்களாகக் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னாரின் உயிர் நேற்று மதியம் (௩௧-௦௫-௨௦௨௨) 5.57 மணிக்குப் பிரிந்தது.
வீரமங்கை அஞ்சலைத் தனது வாழ்நாளில் பல வரலாற்று நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்தவர். அதோடு உள்ளூர் இந்தியச் சமூகத்தில் ஒரு முக்கிய நபராக இன்றும் பலரால் கருதப்படுகிறார்.
குறிப்பாக 1943 ஆம் ஆண்டு ஐஎன்ஏவின் ( INA) பெண்கள் படைப்பிரிவான ஜான்சி படைப்பிரிவின் இணைந்தார்.
அவர் போர் நடவடிக்கைகளில் பயிற்சி பெற்றவர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்கும் முயற்சியில் பர்மா-இந்திய எல்லை வரை துருப்புக்களைப் பின்தொடர்ந்த பெருமைமிக்க அனுபவத்தைப் பெற்றவர்.
இதனிடையே கடந்த ஆண்டு அவரது சேவையைப் பாராட்டி இந்தியத் தூதரகம் நேதாஜி சேவை மையத்தால் அந்தலைக்கு “வீரத் தாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
மலேசியச் சுதந்திர வரலாற்றில் மறக்க, மறுக்க முடியாத வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமியில் நல்லுடல் செந்துல் மயானத்தில் தகனம் செய்யப்படும். அவரின் உடலுக்கு மஇகா தலைவர் தான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன், மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி உட்படப் பலர் அஞ்சலி செலுத்தினர்.

