Site icon அநேகன்

ப.ராமு அறக்கட்டளை ஏற்பாட்டில்‘மலையகத்தொகை’ கவிதை நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், ஜூன் 1-

மலேசியக் கவிஞர்களின் படைப்புகள் கால நதியில் கரைந்துபோகாமல் தொகுப்பு நூல்களாகி அனைவரின் கைகளில் தவழ வேண்டும் எனும் சிறந்த நோக்கோடு மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன், கடந்த ஆண்டு ‘ப.ராமு அறக்கட்டளை’யைத் தோற்றுவித்தார்.

ப.ராமு மறைவுக்குப் பின், ஏப்ரல் 21ஆம் தேதி வெளியீடு கண்ட அவரின் ‘மண்ணிலிருந்து விண்ணுக்கு – ஒரு கவிதை நிலா’ நூல் வெளியீட்டில் அமைச்சர் அறக்கட்டளை குறித்த அறிவிப்பைச் செய்தார். மறைந்த கவிஞர் ப.ராமுவின் இலக்கியப் பணியை நினைவுகூர்வதோடு தொடர்ந்து எழுதி வரும் கவிஞர்களை ஊக்கமூட்டும் நோக்கோடு இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்வழி ஆண்டுதோறும் ஒரு மரபுக்கவிதைத் தொகுப்பும் புதுக்கவிதைத் தொகுப்பும் வெளியிடப்படும். தொடக்கமாக, இவ்வாண்டு 62 கவிஞர்களின் 122 கவிதைகள் அடங்கிய ‘மலையகத்தொகை’ எனும் தொகுப்பு நூல் வெளிவருகிறது. இதைத் தொடர்ந்து புதுக்கவிதை தொகுப்பு நூலும் வெளிவரும்.

‘மலையகத்தொகை’ நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 12.6.2022 (ஞாயிறு) பிற்பகல் மணி 2.00 தொடக்கம் கோலாலம்பூரில் அமைந்துள்ள செந்தூல் செட்டியார் மண்டபத்தில் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்..சரவணன் தலைமையில் நடைபெறும்.

விழாவின் சிறப்பு அங்கமாக, மூத்தோர், இளையோர் பங்குபெறும் கவியரங்கங்கள் இடம்பெறுகின்றன. கவிதைச் சுவை பருகும் இந்த இலக்கிய விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.

Exit mobile version