சிரம்பான், ஜூன் 2-
அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைச் சுவடுகள் தொடர்ந்து வருகின்றன. இம்முறை இச்சாதனைப் படலத்தில் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்விகா திருமுருகன் தனது பெயரைப் பதித்துள்ளார்.
கடந்த 21-28 மே வரை, துர்க்கி நாட்டில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல்சார் புத்தாக்கப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட திட்டப்பணிகளோடு 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 250 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தகுதிப்பெற்றனர்.
அதில், தானியங்கி ஒளிச்செயற்பாட்டுத் தொழில்நுட்பம் எனும் தலைப்பிலான தனது புத்தாக்கத் திட்டப்பணியோடு பங்கெடுத்த சத்விகா திருமுருகன், பிற நாடுகளிலிருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்ததோடு தங்கப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கும் சமூகத்தற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதனிடையே, சுற்றுச்சூழல் அறிவியல் தொடர்பான திட்டப்பணிகளோடு இப்போட்டியில் பங்கெடுத்த சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மற்றுமொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களான திவ்யாசினி, குகனேஸ்வரன், சஸ்மித்தா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்ற வேளையில், மாணவர்கள் பிருந்தா, விசாலன், தனுஷ்கா ஆகியோர் வெங்கலப் பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளனர்.
தனது மகளின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக நின்று பல்வேறு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. கலா ரெங்கசாமி, பயிற்றுநர் திரு. சூரிய பிரகாஷ் விஜயசூரியா, ஆசிரியர் தேவகி, போட்டி ஏற்பாடு செய்த மீக்கா குழுவினர் மற்றும் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் என அனைவருக்கும் சத்விகாவின் பெற்றோர் திரு திருமுருகன் திருமதி கோகிலவாணி தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
இம்மாதிரியான சாதனைகளைத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிகழ்த்தி வருவதைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் பதிய முன்வர வேண்டும் என அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டனர்.

