டாக்கா, ஜூன் 2-
வங்காள தேச தொழிலாளர்களின் நலன் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு மலேசியா – வங்காள தேச அரசாங்கம் தங்களின் நிலைப்படை நிலைநிறுத்துமென மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
டாக்காவில் நடைபெறும் மலேசியா-வங்காள தேசம் ஒத்துழைப்புக் குழு (JWG) கூட்டத்திற்குத் தனது அமைச்சகத்தின் பிரதிநிதிகளை வழிநடத்தச் சரவணன் தற்போது ஒரு நாள் பணி காரணமாக வங்காள தேசத்திற்குச் சென்றுள்ளார்.
அதோடு JWG கூட்டத்தில் வங்காள தேச புலம்பெயர்ந்தோர் நலன், வெளியுறவு அமைச்சர் இம்ரான் அகமதுவுடன் தமது துணை அமைச்சருடன் இணைந்து டத்தோஶ்ரீ சரவணன் கலந்துரையாடினார்.
“இன்றைய கலந்துரையாடல் மலேசியாவில் உள்ள வங்காள தேச தொழிலாளர்களின் நலன்களை உலகளாவிய தரத்திற்கு ஏற்ப பாதுகாப்பதிலும் உறுதி செய்வதிலும் இரு அரசாங்கங்களின் அர்ப்பணிப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தப்பட்டது” என அவர் தமது முகநூல் பதிவில் விளக்கியுள்ளார்.
மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றதிருந்து, சரவணன் நாட்டின் தொழிலாளர் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாகத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் வசதிகள் சட்டம் 1990 [சட்டம் 446] ஆகியவற்றில் திருத்தங்களைச் செயல்படுத்துவது உட்பட, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
அனைத்துத் துறைகளுக்கும் E-Salary முறையையும், பணியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த அமைப்பாகத் தொழிலாளர்களுக்கான வேலை (WFW) முறையையும் அறிமுகப்படுத்தியதும் இதில் அடங்கும்.

