படிவம் மூன்று மதிப்பீட்டை (PT3) நீக்கம் செய்ததைத் தொடர்ந்து பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டை (PBS) வலுப்படுத்துவதில் மலேசியக் கல்வி அமைச்சு (MOE) தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு முக்கியச் சிக்கல்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று ஆசிரியர்கள் மீது சமூகத்தின் நம்பிக்கையை அதிகரிப்பது மற்றொன்று PBS மதிப்பீட்டைச் செயல்படுத்துவதில் கல்வி அமைச்சின் நேர்மையின் அளவை அதிகரிப்பதாகும் என மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தை (UKM) சேர்ந்த டாக்டர் அனுவார் அமாட் கூறியுள்ளார்.
“சிக்கல் என்னவென்றால், ஆசிரியரின் தொழில்முறையைப் பெற்றோர்கள் எந்த மட்டத்தில் பார்க்கிறார்கள்?
“உண்மையில் ஆற்றல்மிக்க, சிறந்த, திறமையான மதிப்பீட்டைச் செயல்படுத்தும் திறன் முறைகளைக் கொண்ட ஆசிரியர்கள் இருந்தால், பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஏனெனில் அவர்கள் ஆசிரியர்களை உயர் கற்பித்தல் நிபுணத்துவம் கொண்டவர்களாக மதிக்கிறார்கள்.” என்றார் அவர்.
கற்பித்தல் நிபுணத்துவத்தில் பெற்றோர் உட்பட சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சு உண்டு.
நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்கள்தான் தங்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியுமெனப் பெற்றோர் கருதுவதாக டாக்டர் அனுவார் கூறினார்.
மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் கல்வி, சமூக நல்வாழ்வு ஆய்வுத் துறையின் விரிவுரையாளருமான அவர், அவானி தொலைக்காட்சி நடத்திய PT3 ஐ நீக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி பிடி3 தேர்வு நீக்கம் செய்யப்பட்டுவதாக ஜூன் 2ஆம் நாள் அறிவித்தார். அதோடு கல்வி அமர்வின் இறுதித் தேர்வின் மூலம் பிபிஎஸ்க்கு அதிகாரம் அளிக்கும் அணுகுமுறையைக் கல்வி அமைச்சு செயல்படுத்துமென்றும் கூறினார்.

