Site icon அநேகன்

இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சரிசமமான நிதி ஒதுக்கீடு தேவை! -நிவாஸ் ராகவன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 7-

12 ஆவது மலேசிய திட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சரிசமமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தத்தை அளிப்பதாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் அரசாங்கத்திடம் தெரிவித்தார்.

வருங்காலங்களில் மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இச்சமூக மக்கள் தொகையின் பொருளாதார வலிமை அடிப்படையில் இவர்களின் தேவைக்கேற்ப சாத்தியமான மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதார பிரிவு) டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமதுவை அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் இனி வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த இந்திய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்படும் என்று தமது அலுவலகத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தினருடனான சந்திப்பின்போது டத்தோஸ்ரீ முஸ்தாபா உறுதியளித்தார்.

அதே வேளையில், மலேசிய இந்தியர்களுக்கான வரைவு திட்டம் (எம் ஐபி) இந்திய சமூக நடவடிக்கை திட்டமாக (பிடிஎம்ஐ) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தினால் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் இது தயாரான பின்னர் அமைச்சரவையிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.

பணவீக்க அதிகரிப்பு, சரிந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு, மோசமாகி வரும் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நிவாஸ் ராகவன் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

இந்த விவகாரங்களைக் கருத்தில் கொண்ட அமைச்சர், தொழிலாளர் பற்றாக்குறையினால் பல்வேறு தொழிற்துறைகளோடு நாட்டின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் பாதிப்படையும். ஆகையால் ,அந்நிய தொழிலாளர்கள் பிரச்னைக்கு உள்துறை அமைச்சும் மனித வள அமைச்சும் உடனடியாகத் தீர்வு காணும் வகையில் இதனை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தாம் கொண்டு செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

புத்ரா ஜெயாவில் அமைச்சர் முஸ்தாபாவின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நிவாஸ் ராகவனோடு சங்கத்தின் துணைத் தலைவர் வி.கே.கே.ராஜசேகரன், உதவி தலைவர் கமால் கம்டார், துணை செயலாளர் மோகனா சின்னதம்பி மற்றும் பொருளாளர் டத்தின் மகேஸ்வரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவு (கொள்கை) துணை தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் சுல்கிப்ளி முகமதுவும் இச்சந்திப்பின்போது உடன் இருந்தார். சந்திப்பின் இறுதியில் அமைச்சருக்கு நிவாஸ் ராகவன் நினைவுச் சின்னம் வழங்கினார்.

Exit mobile version