பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-
சிலாங்கூர் மாநிலத்தில் யாரும் ஒரு வேளை உணவுக்குக் கூட சிரமப்படக் கூடாது எனும் நோக்கில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிக்க்ஷாக்காரன் -டி கண்ணன் இணை ஏற்பாட்டில் இச்சாராரின் விவரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு இதற்கு முன்பு கிஸ் திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திட்டம் தற்போது பிங்காஸ் என பெயர் மாற்றம் கண்டுள்ளது.இதில் அதிகமானோர் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ராஜிவ் ,டி கண்ணன் இருவரும் சிறப்பு அழைப்பு எண்ணை அறிமுகப்படுத்தினர்.
018-3660758 என்பதே அந்த சிறப்பு அழைப்பு எண். மிகவும் சிரமப்படுவோர் இந்த எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைத் தெரிவிக்க வெண்டும். இந்தத் தொலைபேசி எண்ணின் ஒருங்கிணைப்பாளர் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினர் மோகன்ராஜ் ஆவார்.
இவருடன் 20 ஜசெக கிளைத் தலைவர்கள் உண்மையில் யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ஆராயும் பணியில் ஈடுபடுவர் என்று இங்கு தனது சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜிவ் விவரித்தார்.
“ஒருவர் ஒரு வேளை உணவுக்குக் கூட தடுமாறி நின்றால் அது மிகவும் கொடுமை.இது போன்ற நிலையை யாரும் எதிர்நோக்கக் கூடாது. இதன் பொருட்டே இது போன்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்றார் அவர்.
அக்கம் பக்கத்தார், தெரிந்தவர்கள், மற்றவர்களுக்குத் தெரிந்தவர்கள் என உணவுக்குப் பெரும் சிரமப்படுவோரை அடையாளம் காண உதவும்படி இம்மாநில மக்களை இத்திட்டத்தின் இணை ஏற்பாட்டாளரான டி.கண்ணன் கேட்டுக் கொண்டார்.
பிங்காஸ் திட்டத்தில் இன்னும் இடம் பெறாதவர்களை அடையாளம் காண இந்தச் சிறப்பு தொடர்பு எண் மூலம் விவரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையைத் தாங்கள் முன்னெடுத்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
“ குடும்ப வருமானமாக மாதம் 3,000 வெள்ளிக்குக் குறைவாக பெறுவோர் பிங்காஸ் திட்டத்தின் வழி உணவு பொருட்களைப் பெற தகுதி பெறுவர். இவர்கள் உண்மையில் சிரமப்படுகிறார்களா என்பதை எங்கள் கிளைத் தலைவர்கள் ஆராய்வர்” என்றார் கண்ணன்.
இத்திட்டம் 30,000 பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே மாநில அரசாங்கத்தின் இலக்கு. இதற்கேற்ப இத்திட்டத்தில் இன்னும் தங்களைப் பதிந்து கொள்ளாதவர்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை வழங்கும்படி ராசேந்திரன் ராசப்பன் கேட்டுக் கொண்டார்

