Site icon அநேகன்

போதைப்பொருள் விநியோகித்த 2 ஆடவர்கள் கைது

காஜாங், ஜூலை 26-

போதைப்பொருள் விநியோகிப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 2 ஆடவர்கள் செராஸ், 9ஆவது மைலில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்ககத்தில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. முகமட் ஸையிட் ஹாசான் தெரிவித்தார்.இங்கு வெ.31,405 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதில் தொடக்கக்கட்டமாக நள்ளிரவு 12.40 மணிக்கு மேற்கொண்ட சோதனையில் 35 வயது கொண்ட ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 54.8 கிராம் அளவிலான 4 பாக்கேட் எக்ஸடசி தூள் மற்றும் 4 போத்தல் கொண்ட எக்ஸ்டசி திரவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஓர் அறிக்கையில் ஏ.சி.பி. முகமட் ஸையிட் ஹாசான் குறிப்பிட்டார்.

இதே அடுக்ககத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில் ஒரு கடையில் 30 வயதுடைய ஓர் ஆடவர் பின்னிரவு 1.30 மணிக்குக் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 4.5 கிலோ எடையிலான 219 எகஸ்டசி தூள் பாக்கெட்டுகள், 3 போத்தல் எக்ஸ்டசி திரவங்கள், 61 எக்ஸ்டசி மாத்திரைகள், 8.2 கிராம் கெத்தமின், எராமின் 5 மாத்திரைகள் 50 ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அனைத்தும் கிள்ளான் பள்ளத்தாக்குச் சுற்றுப் பகுதிகளிலுள்ள கேளிக்கை மையங்களுக்குச் சந்தைப்படுத்துவதற்காக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இவர்கள் இருவர் மீது மேற்கொண்டச் சிறுநீர் பரிசோதனையில் பெத்தமின் உட்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு இவர்கள் மீது மேற்கொண்ட குற்றப் பதிவுச் சோதனையில் ஒருவன் மட்டும் 2 போதைப்பொருள் குற்றப் பதிவுகள், 5 குற்றச்செயல்களுக்கானப் பதிவுகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் 2 பேரும் வரும் வெள்ளிக்கிழமை வரை 1952 அபாயகர போதைப்பொருள் சட்டம், 39பி பிரிவின் கீழ் விசாரணை செய்யத் தடுப்பில் வைக்கப்படுவர் என்று ஏ.சி.பி. முகமட் ஸையிட் ஹாசான் மேலும் கூறினார்.


Exit mobile version