Site icon அநேகன்

செமினி தீபாவளி விற்பனை விழா– சிலாங்கூர் மாநில அரசின் கூட்டு முயற்சி

செமினி, அக். 2-

சிலாங்கூர் மந்திரி புசார், எம்பிகேஜே 21 ஆவது வட்டார நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் செமினி சட்டமன்ற
இந்திய சமூக தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு” சிலாங்கூர் வேப்” எனப்படும் சிலாங்கூர் மாநில சமூக
நல மற்றும் தொண்டூழிய மேம்பாட்டு சங்கம் செமினி தீபாவளி விற்பனை விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விற்பனை விழா இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு காலை மணி 10.00
முதல் இரவு மணி 10.00 வரை செமினி பட்டணத்தில் நடைபெறும் என்று எம்பிகேஜே 21 ஆவது வட்டார நகராண்மைக்
கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜூனன் தெரிவித்தார். கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட
சிறு-நடுத்தர வர்த்தக துறையை மறுமலர்ச்சி காண மற்றும் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசாங்கம்
மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையே 2022 செமினி தீபாவளி விற்பனை விழா என்று அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகர்கள் எம்பிகேஜே பெர்மிட்டிற்கான செலவை மட்டுமே ஏற்றுக் கொண்டால் போதுமானது. அதோடு,
தீபாவளியையொட்டிஇந்திய வர்த்தகர்களுக்கு ஐ-முசிம் கடனுதவி திட்டம் மற்றும் விற்பனை செய்யும் பொருட்களுக்கு
இலவச விளம்பரம் உள்ளிட்ட இதர பல அனுகூலங்களும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் வேப் ஆலோசகர்
ராஜேந்திரன் குமார் முனுசாமி விவரித்தார்.

இவற்றைத் தவிர்த்து இந்த விற்பனை விழா நடைபெறும் காலத்தில் முறுக்கு தயாரிப்பு, மருதாணி இடுதல்
மற்றும் கோலம் போடும் போட்டி, உறுமி மேளம், ஆடல், பாடல், அதிர்ஷ்ட குலுக்கு போன்ற அங்கங்களும்
வருகையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி சுற்று வட்டார வணிகர்களை செமினி
சட்டமன்ற இந்திய சமூக தலைவர் கே. நடேசன் மற்றும் சிலாங்கூர் வேப் தலைவர் எல். விஸ்ணு தேவ்
ஆகிய இருவரும் கேட்டுக் கொண்டனர்.

Exit mobile version