Site icon அநேகன்

தீபாவளி வாழ்த்து விளம்பரத்தில் தமிழ் வார்த்தைகள்! -டாக்டர் சத்தியபிரகாஷ் விளக்கம்

ரவாங், அக்.20-

    தமது தீபாவளி வாழ்த்து விளம்பரத்தில் தமிழ் மொழி இடம் பெற்றிருப்பதாகவும் உண்மை நிலை அறியாது  சிலர் சமூக வளைத் தளங்களிலும், புலனங்களிலும் தம்மைச் சாடி வருவது அநாகரீகமான செயல் என்றும் இவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவரான டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் வருணித்தார்.

    ஒரு தவறு நடந்துவிட்டால் அதனைச் சுட்டிக் காட்டுவதில் தவறு கிடையாது. அதனை நாம் திருத்திக் கொள்ளலாம். இதை விடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பது முற்றிலும் தவறாகும் என்றார் அவர்.

    மற்ற இனத்தவர்களும் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக தமது தீபாவளி வாழ்த்து விளம்பரம் மலாய், ஆங்கில மொழிகளில் இடம் பெற்றிருந்தது குறித்து பலர் தங்களின் அதிருப்தியை அநாகரீகமான முறையில் வெளிப்படுத்தியது வேதனை தருவதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் சத்திய பிரகாஷ் விவரித்தார்.

    “ அந்த விளம்பரத்தில் தமிழ் எழுத்துகளைக் காணலாம். தமிழ் மொழி எவ்வளவு முக்கியமோ அதே போலவே தமிழ்ப் பண்பாடும் மிக முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது எண்ணம், வார்த்தைகள் பிறருக்கு நன்மை தருபவையாக இருத்தல் வேண்டும்” என்றார் உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவருமான அவர்.

    உலு சிலாங்கூரில் நிபுணத்துவ மருத்துவமனை கிடையாது. இதற்காக இங்குள்ள மக்கள் வெகு தொலைவிற்குச் செல்ல வேண்டும். இதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

    அடுத்து, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும்  கல்வியைப் பற்றியும் நாம் அவசியம் சிந்திக்க வேண்டும். போக்குவரத்து உட்பட மாணவர்கள் அடிப்படை வசதிகளைக் கொண்டிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய துணைச் செயலாளருமான டாக்டர் சத்திய பிரகாஷ்.

    கோவிட் -19 பெருந்தொற்று, வெள்ளப் பேரிடர் போன்ற சோதனைமிக்க காலங்களில்  பாதிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் மருத்துவ தேவைகளை நிறைவேற்றியவர் டாக்டர் சத்திய பிரகாஷ் ஆவார்.

    அதே வேளையில், பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் வளமான வாழ்க்கைக்கும் வழி வகுத்துள்ளார். 

Exit mobile version