கோலாலம்பூர், அக்.27-
தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஐ.பி.எப். பத்து தொகுதியின் ஏற்பாட்டில் வசதி குறைந்த150
குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பத்து, செந்தூல் வட்டாரங்களைச் சேர்ந்த
வசதி குறைந்த 150க்கும் மேற்பட்டக் குடும்பங்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன
என்று ஐ.பி.எப். பத்து தொகுதித் தலைவர், மகாதேவன் தெரிவித்தார்.
வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 15ஆவதுப் பொதுத்தேர்தலில் பத்து
தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் ஐ.பி.எப்.
தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக பத்து தொகுதியின் தேசிய முன்னணித் தலைவரும்
அம்னோ பத்து தொகுதித் தலைவருமான டத்தோஸ்ரீ ஹாஜி யாஹ்யா மாட் கானி, அம்னோ பத்து
தொகுதியின் செயலாளர் துவான் ஹாஜி கூலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில்
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ ஹாஜி யாஹ்யா மாட் கானி இதுபோன்ற நிகழ்வுகளைத்
தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் ஐ.பி.எப். பத்து தொகுதியை வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் முக்கிய நோக்கம் தீபாவளியன்று மக்களை மகிழ்ச்சிப்
படுத்துவதற்கே ஆகும். இதன் மூலம் அவர்களின் சிரமங்களைக் குறைத்து என்றென்றும்
மகிழ்ச்சியுடன் இருக்க வகை செய்ய முடியும் என்று ஐ.பி.எப். பத்து தொகுதித் துணைத் தலைவர்,
டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.

