Site icon அநேகன்

ஜசெக வெளியிடுவது தற்பெருமை அறிக்கைகளையே!-சுவான் ஹோங் சாடல்

பட்டர்வொர்த், நவ.11-

மக்களுக்காக தாங்கள் எதையும் செய்யத் தயார் என்று கூறி வரும் ஜசெக இறுதியில் வெளியிடுவது  தற்பெருமை அறிக்கைகளையே என்று பாகான் நாடாளுமன்ற தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் டான் சுவான் ஹோங் சாடினார்.

ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கம் தற்பெருமை கூறுவதில் மட்டுமே சிறந்து விளங்குகிறதே தவிர வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தவறிவிட்டது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கீழ்க்காணும் விவகாரங்களில் பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் பெருமைமிக்க பேச்சுகளைக் காணலாம்:

1. சுங்கை ஞியோர் டோல் கட்டணம் அகற்றம் –

மூன்று தவணைகளாக மாநில அரசாங்கத்தை நிர்வகித்து வரும் நிலையில் 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத் தேர்தல் தொடங்கி இன்று வரை இதனை நிறைவேற்றியபாடில்லை.

2. மாக் மண்டின் மலிவு விலை அடுக்குமாடி நகர்ப்புற மறுவாழ்வு திட்டம்-  அம்பாங் ஜாஜாரில் மலிவு விலை அடுக்குமாடி பகுதிக்கு குடியிருப்பாளர்களை மறுகுடியேற்றம் காணச் செய்வதற்குப் பதிலாக மாக் மண்டின் மலிவு விலை அடுக்குமாடி நகர்ப்புற மறுவாழ்வு திட்டத்தைத்  தொடங்குவோம் எ‌ன்று ஜசெக 2008 ஆம் ஆண்டு  கூறியது. ஆனால், பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமோ அப்பகுதியில் இன்று சக்திக்கு உட்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. நகர்ப்புற மறுவாழ்வு திட்டம் தோல்வியில் முடிந்தது. அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் இதனால் கடும்  ஏமாற்றத்திற்கு உள்ளாயினர்.

3. பினாங்கு கடலடி சுரங்கப் பாதை – பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பினாங்கு தீவின் கர்னியில் இருந்து பாகான், பந்தாய் பெர்சே வரை கடலடி சுரங்கப் பாதையை அமைக்க இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு கையெழுத்தானது. ஆனால், இன்று வரை இன்னும் தொடங்கப்படவில்லை. இது மற்றுமொரு பொய் அல்லவா?

4.  குறுக்கு – கடல் இலகு ரயில் திட்டம்- பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பினாங்கு தீவு, ஐஜேஎம் நிலம், தி லைட்டில் இருந்து செபராங் பிறை, சுங்கை ஞியோர் வரை குறுக்கு – கடல் இலகு ரயில் சேவையைத் தொடங்கப் போவதாக 2016 இல் அறிவித்தது. ஆனால், இதன் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

5. பினாங்கு ஸ்கை கேப் – கடந்த 2015 ஆம் ஆண்டு பினாங்கு நீரிணையில் பினாங்கு தீவு, மெர்டேக்கா நெடுஞ்சாலையில் இருந்து பட்டர்வொர்த், பினாங்கு சென்ட்ரலை இணைக்கும் பினாங்கு ஸ்கை கேப் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் லிம் குவான் எங்  அறிவித்தார். மீண்டும் அதே கதிதான். எதுவும் நடக்கவில்லை.

மேற்கண்டவை  யாவும்  பாகானில் வாக்குகள் பெறுவதற்காக மூன்று தவணைகள் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் வழங்கிய பெருமைமிக்க பேச்சுகள். “மீண்டும் ஜசெகவிடம் ஏமாற்றம் அடையக் கூடாது என்று மக்களுக்கு இவை நினைவுறுத்தும் என்று நான் நம்புகிறேன். அதே வேளையில், ஏமாற்றியது போதும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ஜசெகவை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் டான் சுவான் ஹோங்.

பாகானுக்கு மறுமலர்ச்சியைக் கொண்டு வரும் வகையில் இந்த 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும்படி இத்தொகுதி மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version