பாகான், நவ.16-
பாகான் நாடாளுமன்ற தொகுதியில் கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு மைக்ரோ -டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் சிறு & நடுத்தர தொழிற்துறை வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்துவது அவசியம். இதன் வழி பாகான் பொருளாதாரத்தை மறு மலர்ச்சி காணச் செய்யலாம் என்று இத்தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் டான் சுவான் ஹோங் நம்பிக்கை தெரிவித்தார்.
சீன கலாச்சார கூறுகள் நிறைந்த இடம் ராஜா ஊடா. இதனை சீன பாரம்பரிய தலமாக மேம்பாடு காணச் செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
” அதே சமயம், மலாய் பாரம்பரியம் நிறைந்த ஜாலான் மெங்குவாங்கை மலாய் பாரம்பரிய கிராமமாக மேம்படுத்தலாம்” என்றார் சுவான் ஹோங்.
” ஜெட்டி லாமா சுற்றுப் பகுதி லிட்டல் இந்தியாவாக மாற்றுவதற்கு மிகவும் பொருத்தமான இடம். அதோடு, இரண்டு வரலாற்றுப்பூர்வ ஆலயங்களும் இங்கு உள்ளன.இவற்றின் சுற்றுப் பகுதியில் உள்ள பழைய கட்டடங்கள் பழுதுபார்க்கப்பட்டு புது தோற்றம் காணச் செய்யலாம். கலை ஆர்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்போடு அவற்றில் பாகானின் வரலாற்றைக் கொண்ட ஓவியங்களை இடம் பெறச்செய்யலாம்.இவற்றில் வரலாறு மற்றும் கலாச்சார கூறுகள் அவசியம் காணப்பட வேண்டும்” .
சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில் ராஜா ஊடா, ஜாலான் மெங்குவாங் மற்றும் ஜாலான் ஜெட்டி லாமா ஆகியவை சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
“அதோடு, பந்தாய் பெர்சேவும் கடல் உணவு மற்றும் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட வேண்டும்” என்றார்.
பினாங்கு சென்ரல் சுற்றுப்பகுதியும் வட மலேசியாவின் சிறந்த போக்குவரத்து தலமாக மேம்பாடு காண வேண்டும். பட்டர்வொர்த்திற்கு அதிகமான சுற்றுப் பயணிகள் வருகை புரிவதோடு அவர்கள் இங்கு பணத்தையும் செலவழிக்க முடியும். இது உள்ளூர் மக்களுக்கு வர்த்தக வாய்ப்புகளோடு அதிகமான வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் .
இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதற்கு ஏதுவாக பினாங்கு துறைமுக சுயேச்சை வர்த்தக மண்டலம் அமைக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் பொருட்களை விற்பனை செய்து பட்டர்வொர்த்தை வளம் பெறச் செய்ய வேண்டும்.
.”பாகானில் வர்த்தக வாய்ப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. இதனால் அதிகமான வேலை வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம். இவ்விவகாரத்தை தேசிய முன்னணி- மசீச கடுமையாக ஆராயும். பாகான் வாக்காளர்கள் தேசிய முன்னணி- மசீசவிற்கு ஒரு வாய்ப்பளித்து அதன் வேட்பாளருக்கு வாக்களிப்பர் என்று நம்புகிறேன்” என்றார் சுவான் ஹோங் .
உள்ளூர் மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து இவர்களின் சம்பளமும் அதிகரித்து இவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் மாக் மண்டினில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை மீட்சியடையச் செய்வது குறித்தும் சுவான் ஹோங் பரிந்துரை செய்தார்.
“இளைஞர்களுக்கு தொழில் முனைவர் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு டேவான் டத்தோ ஹாஜி அகமது படாவி சுற்றுப் பகுதிகளை மைக்ரோ -டிஜிட்டல் வர்த்தக மையமாக உருவாக்குதல். இதன் வழி பாகானில் உள்ள இளைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று வர்த்த்கத்தில் தங்களின் திறனை வெளிப்படுத்தலாம். பாகான் மீண்டும் எழுச்சி பெற இது உதவும்!”
எளிய முறையில் கூறுவதானால்:
சுற்றுலா துறையை ஊக்குவிக்க கலாச்சார பாரம்பரியம்;
சுற்றுப்பயணிகளை ஊக்குவிக்க போக்குவரத்து வசதிகள்;
டிஜிட்டலில் மாஸ்டர் மற்றும் எஸ் எம்இ வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல்;
பட்டர்வொர்த்தில் வளங்களைக் கொண்டு வருதல்;
தொழிற்துறையை மேம்படுத்துவதோடு திறமையைக் கட்டிக் காத்தல்;
அமைதி மற்றும் மனநிறைவான சூழலில் வாழ்தல் மற்றும் வேலை செய்தல்;
நிலையான வளப்பத்தோடு பாகானை முன்னேற்றம் காணச் செய்வோம்!

