கோலாலம்பூர், ஜன.30
மலேசிய ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை இங்குள்ள புக்கிட் ஜாலில் அரங்கை இசை மழையில் நனைய வைத்தது.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி என்றாலே அதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு அரங்கம் நிறைந்த 60ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்களின் கூட்டம் மெய்ப்பித்தது.
“ஜெய் ஹோ” துவக்கப் பாடலோடு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் தோன்றியபோது ரசிகர்கள் எழுப்பிய கரவொலி அரங்கை அதிரச் செய்தது.
முக்காலா, எல்லாப் புகழும் போன்ற பாடல்கள் தொடங்கி பொன்னி நதி பாக்கணும், வந்தே மாதுரம் வரையிலான பாடல்கள் வரை ஏ.ஆர்.ரஹ்மான் உற்சாகம் குன்றாது பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
பிரம்மாண்ட மேடை அலங்காரம், ஒலி, ஒளியமைப்போடு படைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சுவேதா, ஹரிச்சரண் போன்றோரின் பாடல்களும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின என்றால் மிகையாகா.
இவர்களின் வென்னிலவே, அழகான ராட்சசியே , டெலிபோன் மணிபோல, உயிரே, என்ன சொல்லப் போகிறாய் போன்ற பாடல்களைக் குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டும்.
தொடர்ந்து, பல ராகங்களில் அமைந்த பாடல்கள் சிலவற்றை சில வரிகளில் பாடகர்கள் பாடிக் காண்பித்தது இசைப் புயலின் இசைக் கையாடலைப் புலப்படுத்தியது.
நாட்டின் பிரபல மலாய்ப் பாடகி டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹாலிசாவின் ‘முன்பே வா’ பாடல் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது என்பது அவர்களும் கூடவே சேர்ந்து பாடியதன் வழி அறிய முடிந்தது.
டிஎம்ஒய் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான இந்த இசை நிகழ்ச்சியில் பாடகி ஜோனித்தா, ரட்சிதா போன்ற பாடகிகளும் பங்கேற்று நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தனர்.
இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியைக் காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஜிசாவும் வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
