Site icon அநேகன்

பல்லின மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திய செந்தோசா பொங்கல் விழா!

கிள்ளான், ஜன.31-
நாட்டிலுள்ள பல்லின மக்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதில் வெற்றி கண்டது இங்குள்ள செந்தோசா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா.

விரைவில் பொங்கல் வைத்தல், மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை, தோரணம் பின்னுதல், கோலம் போடுதல், கோலாட்டம், சேலை கட்டுதல், உரி அடித்தல் போன்ற போட்டிகள் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தை களை கட்டச் செய்தன.

மேள தாள வாத்தியம், பாரம்பரிய நடனம், அதிர்ஷ்ட குலுக்கு, பரிசளிப்பு என விழாவிற்கு வருகை புரிந்தவர்களுக்கு உற்சாகத்தையும்  குதூகலத்தையும்
ஏற்படுத்தியது.

” இந்தியர்களின்
பாரம்பரிய நடனம், விளையாட்டுகள் வாழை இலையில் உணவு பரிமாறுதல் முதலியவற்றை சீனர், மலாய்க்காரர் என பல்லின மக்கள் தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக இப்பொங்கல் விழா அமைந்துள்ளது” என்றார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் குணராஜ்  ஜோர்ஜ்.

இந்த வட்டாரத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் நட்பும் ஒத்துழைப்பும் நமக்கு மிகவும் தேவை. இந்தப் பொங்கல் விழாவில் அவர்களையும் அழைத்து பங்கேற்கச் செய்யும்போது இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மேலோங்குகிறது.

மேலும், அவர்கள் நமது பண்பாட்டுக் கூறுகள் பற்றி அறிந்து கொள்ளும்போது இரு தரப்புகளுக்கு  இடையிலான புரிந்துணர்வும் அதிகரிக்கிறது என்பதை குணராஜ் சுட்டிக் காட்டினார்.

300க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 2,500 வெள்ளி ரொக்கப் பரிசுகள்  வழங்கப்பட்டன.

செந்தோசா சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டிலான இந்தப் பொங்கல் கொண்டாட்டம் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் ஏற்படுத்தியதோடு  ஒற்றுமைப் பொங்கல் விழாவிற்கு அடையாளமாக அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்திய ஒரு திருநாளாக  அமைந்தது என்றால் மிகையாகா.

Exit mobile version