கோலாலம்பூர், பிப்.1-
பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒற்றுமையை விதைப்பதில் நாம் பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று கெஅடிலான் வங்சா மாஜூ டிவிஷன் தலைவர் என்றி லாய் ஆலோசனை கூறினார்.
பல்வேறு சமய, நம்பிக்கைகள் கொண்ட நாட்டில் ஒருவர் மற்றவரின் கலாசார பண்புகளை மதிப்பது அவர்களுடனான நல்லுறவை வலுப்படுத்தும் என்று என்றி லாய் குறிப்பிட்டார்.
“இது போலவே பெருநாள் காலங்களில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர் மற்றவரின் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்போது அவர்களிடையே புரிந்துணர்வு மேலோங்குகிறது” என்று இங்கு ஜாயிட் பின் ஹாரிட்சா பள்ளிவாசலில் முதன் முறையாக நடைபெற்ற சீனப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
ஜாலான் கோம்பாக் சுற்று வட்டார மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் ஜாயிட் பின் ஹாரிட்சா பள்ளிவாசல், கம்போங் சுங்கை மூலியா மற்றும் கம்போங் லீ கோங் சியான் குடியிருப்பாளர் நடவடிக்கை குழுவினர் கூட்டாக ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு பள்ளிவாசலில் நடைபெறுவது இதுவே முதன் முறை என்று சுட்டிக் காட்டிய வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஜாஹிர் ஹாசான், உள்ளூர் மக்களிடையே புரிந்துணர்வும் , ஒற்றுமையும் மேலோங்குவதற்கு வழி வகுத்திருக்கும் இதுபோன்ற பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகள் இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்றார்.
ஜாவி,எம்பிபி, டிபிகேஎல், சமூக தலைவர்கள் மற்றும் ஹிடாயா மைய அறவாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் சிறப்புப் பிரமுகர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வந்திருந்த அனைவரும் சுவையான உணவு மற்றும் பலகாரங்கள் உட்பட பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்ததோடு சிங்க நடனம் மற்றும் சீலாட் தற்காப்பு கலைப் படைப்பையும் கண்டு மகிழ்ந்தனர்.
