கோலாலம்பூர், பிப்.9-
பாடல் வரிகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய குரலையே தமது பாடல்களுக்குத் தாம் தேர்ந்தெடுப்பதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறினார்.
பாடல் வரிகளில் உள்ள அர்த்தத்தையும் உணர்வுகளையும் எந்தக் குரலால் கொண்டு வர முடியுமோ அந்தக் குரலையே தாம் தேர்ந்தெடுப்பதாகவும் இதை விடுத்து ஒரு பாடலுக்காக எந்தக் குரலையும் வெறுமனே தாம் தேர்ந்தெடுப்பதில்லை என்றும் இங்குள்ள தங்கும் விடுதியில் “சவுண்ட் ஆஃப் தி சவுத்” எனும் தமது இசை நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் கூட்டத்திற்குப் பின்னர் அநேகன் ஊடகத்திடம் விவரித்தார்.
அதே வேளையில், திரைப்படப் பாடல்களுக்கும் தமது தனிப்பட்ட பாடல் தொகுப்புகளுக்கும் இடையிலான தமது இசை அமைப்பில் வித்தியாசம் ஏதும் இல்லை என்றார்.
மலேசியாவை தளமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘கபாலி’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தனது இசையில் பல புதுமைகளைப் புகுத்துவதன் வழி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
இவரின் “சவுண்ட் ஆஃப் தி சவுத்” இசை நிகழ்ச்சி வரும் மார்ச் 18 ஆம் தேதி தலைநகர் அக்ஸியாத்தா அரங்கில் மாலை 6.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது இந்நிகழ்ச்சியில் இவருடன் தீ, துருவ் விக்ரம், ஹரிச்சரன், சூப்பர் சிங்கர் பிரியங்கா, விஜய் நரேன், அனந்து, எஸ்விடிபி, கானா முத்து உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
ஏறத்தாழ 13,000 பேர் கண்டு களிப்பர் என்று எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்.
இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் சிறந்த முறையில் கண்டு களிக்கும் வகையில் மேடையின் மையப் பகுதி 360 டிகிரி வடிவமைப்பில் 3 இசைக் குழுக்களாகத் தோன்றும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான ரீச் புரொடக்ஷன் நிறுவனத்தின் இயக்குநர்கள் யுகேஸ்வரன், சுரேஷ் இருவரும் கூறினர்.
இது சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக படைக்கும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடத்தும் பொருட்டு இந்தியா, மும்பை, ரப்போர்ட் குளோபல் ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் தீபக் சுட்டானி தங்களுடன் இணைந்திருப்பதாகவும் இந்நிறுவனம் உலகளாவிய நிலையில் 2,000 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
சந்தோஷ் நாராயணனின் இசை என்றாலே பல புதுமைகளைக் கொண்டிருக்கும் என்பது ரசிகர்கள் அறிந்ததே. இது போலவே இவரின் இந்த இசை நிகழ்ச்சியும் பல்வேறு வித்தியாசமான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் கூறினர்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏமாற்றத்தைத் தவிர்க்க www.ticket2u.com.my எனும் அகப்பக்கத்தை இன்றே வலம் வரும்படி ரசிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேல் விவரங்களுக்கு 014-9869665 எனும் எண்ணில் வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
