Site icon அநேகன்

சட்டவிதிகளைப் பின்பற்றுவீர்! – ஐபிஎப் முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோருக்கு பொதுச் செயலாளர் வேண்டுகோள்

செர்டாங், பிப். 10-

ஐபிஎப் கட்சியின் தேசிய பொறுப்புகளுக்கு போட்டியிடுகின்றவர்கள் சட்டவிதிமுறைகளை கடைபிடிக்குமாறு இக்கட்சியின்  பொதுச் செயலாளர் மோகன் கேட்டுக்கொண்டார்.

ஐபிஎப்  ஒரு ஜனநாயக கட்சி. இந்நிலையில் கட்சி தலைமை பொறுப்பிற்கு அனைவரும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. இருப்பினும், கட்சிக்கென்று சட்டவிதிமுறைகள் உள்ளன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென மோகன்  வலியுறுத்தினார்.

இது தேர்தல் ஆண்டு என்பதால் தேசிய , மகளிர் மற்றும் இளைஞர் பகுதி உட்பட அனைத்து பொறுப்புகளுக்கும் தகுதியானவர்களை பேராளர்களே தேர்வு செய்வர்.   தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நபர் கட்டாயம் தொகுதி தலைவராக இருத்தல் அவசியம் என்பதை  போட்டியிட விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். .  அந்நபர் போட்டியிட வாய்ப்பு வழங்கும் வண்ணம் குறைந்தது 20 தொகுதிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  அந்த ஆதரவு தொகுதி கூட்டத்தில்  தொகுதி பேராளர்கள் அல்லது தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து உணவகத்திலோ அல்லது காப்பி கடைகளில் வேட்பாளர் பாரத்தில் கையொப்பமிட கூடாது. அப்படி செய்தால் கட்சி சட்டவிதிமுறைப்படி தவறு. அப்படி கையொப்பமிட்ட பாரம் நிராகரிக்கப்படும் என்பதை மோகன் சுட்டிக் காட்டினார்.

தொகுதி கூட்டத்தில்  பேராளர்கள் முன்னிலையில் ஒருவரை ஆதரித்து கையொப்பமிட்ட பிறகு தொகுதி பொறுப்பாளர்களுக்குத் தெரியாமல் மற்றொருவரை ஆதரிப்பதாக அவர் பாரத்தில் கையொப்பமிடுவது கட்சி சட்டவிதிமுறைகளுக்கு புறம்பானது. அப்படி கருதப்படும் வேட்புமனு பாரம் கட்டாயம் நிராகரிக்கப்படும் என்பதையும்  அவர் குறிப்பிட்டார்.

இதே விதிமுறைகள் இதர பதவிகளுக்குப் போட்டியிடும்  வேட்பாளர்களுக்கும் பொருந்தும். கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும்  வேட்பாளர் கட்டாயம் தொகுதி தலைவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 15 தொகுதிகள் அவரை ஆதரிக்க வேண்டும்.

5 தேசிய உதவித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் அவசியம்‌. அவர்கள்  குறைந்தது 10 தொகுதிகளின் ஆதரவைப்  பெறவேண்டும்.  தேசிய மத்திய செயலவைக்குப்  போட்டியிடும் நபர்கள் கட்சி உறுப்பினராக  குறைந்தது 5 ஆண்டுகள் இருத்தல் வேண்டும். குறைந்தது 5 தொகுதிகளின் ஆதரவை அவர்  பெற வேண்டும்.

இதன் பொருட்டு போட்டியிடவிருக்கின்ற அனைத்து வேட்பாளர்களும் கட்சியின் சட்டவிதிமுறைகளைக் கடைபிடித்து 30ஆவது தேசிய பேராளர் மாநாடும்   தேசிய தேர்தலும் சுமூகமாக நடைபெற  ஒத்துழைப்பு நல்குமாறு  மோகன் வேண்டுகோள் விடுத்தார் .

Exit mobile version