கோலாலம்பூர், பிப்.11-
நாட்டின் 10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாகிட் ஹமிடி தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி மகத்தான ஆதரவை வழங்கும் என்று இக்கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாடு அரசியல் நிலைத்தன்மையும், பொருளாதார வளமும் பெற்று மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்த நடப்பு அரசாங்கத்திற்கு மக்கள் சக்தி கட்சி பிளவுபடாத ஆதரவை வழங்கும் என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் கூறினார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாநில தேர்தல்களில் மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட உச்சமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக நேற்று நடைபெற்ற அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
“கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் தேசிய முன்னணிக்கான கட்சி உறுப்பினர்களின் ஆதரவு வலுவாக உள்ளது. ஆகையால், இம்மாநிலங்களில் போட்டியிட தேசிய முன்னணி தலைமைத்துவம் எங்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.
இது தவிர்த்து, மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர், அரசு சார்பு நிறுவன (ஜிஎல்சி) பதவி, வெளிநாட்டு தூதர், ஊராட்சி மன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இக்கூட்டத்தில் முன் வைக்கப்பட்டதாக தனேந்திரன் மேலும் சொன்னார்.
“இதுபோன்ற பதவிகள் இதுவரை எங்களுக்கு வழங்கப்பட்டதில்லை. இப்பதவிகளுக்கு எங்களிடம் தகுதியான, திறமையான மற்றும் அனுபவமிக்க தலைவர்கள் உள்ளனர். எங்களை இப்பதவிகளில் அமர்த்துவதற்கு பிரதமர் வாய்ப்பு வழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.
வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பால் பி40 மக்களும் மூலப் பொருட்களின் விலையேற்றத்தினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சாராருக்கு தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பிரதமர் துறையின் கீழ் பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் பொருட்டு, இவர்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் இவர்களுக்குப் போதிய உதவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்க வேண்டும்.பி 40 பிரிவைச் சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் உரிய உதவிகள் சென்றடைய வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் அவர் விவரித்தார்.
தொடர்ந்து, ஊழல் துடைத்தொழிப்பு மற்றும் நேர்மையான நீதி பரிபாலன முறை ஆகியவற்றின் மீது முக்கிய கவனம் செலுத்தும் பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை இக்கட்சி பாராட்டியது. அதே வேளையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு எதிராக நியாயமான தீர்ப்பு வழங்கப்படுவதோடு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
