Site icon அநேகன்

டத்தோ ஏகேவின் ‘ஆதித்யா அருணாசலம்’ பிப்.16 முதல் உள்ளூர் திரையரங்குகளில் வெளியீடு!

கோலாலம்பூர், பிப்.13-

மலேசிய திரைப்படத்திலும் இப்படியொரு ‘பஞ்ச் டைலக்கா’  என்று வியப்புறும் அளவுக்கு அமைந்துள்ளது உள்ளூர் திரைப்படமான ‘ஆதித்யா அருணாசலம்’.

கிள்ளான் வட்டார தொழிலதிபர் டத்தோ ஏகே தயாரிப்பிலான இத்திரைப்படத்தை உள்ளூர் கலைத் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக முத்திரை பதித்து வரும் காண்டீபன் எனும் பென் ஜி இயக்கியுள்ளார்.

வழி தவறிச் செல்லும் இளைஞர்களின்  செயலை முறியடிக்கும் அமலாக்க தரப்பினரை மையப்படுத்தி கதை அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில் வரும் “சொல்லறதை மட்டும்தான் செய்யணுமா? சொல்லாததையும் செய்யலாம். சொல்லிக்கிட்டே செய்யலாம்” போன்ற பஞ்ச் வசனங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.

கதாநாயகன், கதாநாயகி  தோன்றும் பாடல் காட்சி உட்பட  படக் காட்சிகள் யாவும்  சூப்பர். கதாபாத்திரங்களின் தேர்வும் நடிப்பும்  இயக்குநரின் திறமைக்குச் சபாஷ் கூறும் வகையில் அமைந்துள்ளன.

ஆக்‌ஷன், காதல் அம்சம் கலந்த இத்திரைப்படத்தில் கதாநாயகன் பாத்திரத்தில் ஏற்படும்  திருப்பு முனை. கதையோட்டத்திற்கு  வலு சேர்க்கிறது.

சிறந்த தொழில்நுட்பம் திரைப்படத்தைத் தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக்கியுள்ளதைக் காண  முடிகிறது. கதாபாத்திரங்களின் முக ஒப்பனையும் பாராட்டும்படி இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், கதாநாயகன், கதாநாயகி என அனைவருக்குமே  ‘ஆதித்யா அருணாசலம்’ முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..எனினும்,  இத்திரைப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

கதாநாயகன் காஃபூர், கதாநாயகி பானு நடிப்பில் மலர்ந்த இத்திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் நாடு முழுமையும் உள்ள 36 திரையரங்குகளில் வெளியீடு காணவிருக்கிறது.

இதனிடையே,  ‘ஆதித்யா அருணாசலம்’ திரைப்படத்தின் வழி கிடைக்கும் லாபத்தை நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகத் தாம் பயன்படுத்தப் போவதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான டத்தோ ஏகே தெரிவித்தார்.

“தமிழ்ப்பள்ளிகள் சீனப்பள்ளிகள் போல நல்ல மேம்பாடு காண வேண்டும். அனைத்துலக நிலைக்கு இவை தரம் உயர்த்தப்பட வேண்டும். இந்தப் பள்ளிகளுக்குத் தேவையான நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்க இத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை நான் வழங்குவேன் “ என்று  இங்கு  நடைபெற்ற  ‘ஆதித்யா அருணாசலம்’ திரைப்படம் மீதான செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விவரித்தார்.

“இது வெறும் வார்த்தையோடு நின்றுவிடாமல் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த  வழக்கறிஞர் வழி ஒப்பந்தத்திலும் இன்று கையெழுத்திடவிருக்கிறேன்” என்று இத்திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்டக் காட்சிக்கு முன்னர்  ஏகே. குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வகையில்  எனது பங்காக இத்திரைப்படத்தின் வாயிலாக கிடைக்கும் லாபத்தை நான் வழங்கவிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

குப்பைகளைச் சுத்தம் செய்வதை விட குப்பைகளைப் போடுபவர்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை இயக்குநர் இப்படத்தில்  ஏன் முன் வைக்கிறார் என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் கலைஞர்களுக்காக மட்டுமின்றி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும் இத்திரைப்படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Exit mobile version