Site icon அநேகன்

ஹார்லி டேவிட்சன் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு பயணம்!

பெட்டாலிங் ஜெயா, பிப். 18-

மக்களிடையே புற்றுநோய் மீதான  விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்   ஹார்லி  டேவிட்சன் மலேசிய புற்றுநோய் சங்கத்துடன் இணைந்து  சிறப்பு  மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 24 ஆம் தொடங்கும் இந்தப் பயணத்தில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படும் என்று ஹார்லி  டேவிட்சன் பிஜே சேப்டரின் இயக்குநர் ஜெகன் கூறினார். 

அன்றைய தினம்  பெட்டாலிங் ஜெயாவில் இருந்து புறப்பட்டு   ஈப்போ, பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று  மீண்டும் பெட்டாலிங் ஜெயாவில் இப்பயணம் முடிவடையும் என்று அவர் சொன்னார்.

நாட்டில் ஒவ்வொரு 10 பேருக்கு ஒருவர் என்ற நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தைத் தாங்கள் தொடங்கவிருப்பதாக இங்கு நடைபெற்ற இப்பயணம் மீதான செய்தியாளர்கள் கூட்டத்தில்  விவரித்தார்.

இக்கூட்டத்தில் எம்பிபிஜே தலைவர் முகமட் அஸஹார், மலேசிய புற்றுநோய் சங்கத்தின் இயக்குநர் டாக்டர் முரளிதரன் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் 66ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் “66 ஆவது புற்றுநோய்  பயணம்” என இத்திட்டத்தைத்  தாங்கள் முன்னெடுத்திருப்பதாகவும்   ஒவ்வொரு மாநிலத்திலும்  உள்ள புற்றுநோய் நோயாளிகளைச்  சந்தித்துப் பேசிஅவர்களுக்குப்  பரிசுகளையும் வழங்கவிருப்பதாக  ஜெகன் மேலும் சொன்னார்.

இதனிடையே இப்பயணத்தில் நிறைவு விழா வரும் 26 ஆம் தேதி லாமான் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி சிறப்பு வருகை  புரியவிருக்கிறார் .

புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதலில் வரும்   150 பேருக்கு இலவசமாக  புற்றுநோய் சோதனை  மேற்கொள்ளப்படும்.

மற்றவர்கள் 50 வெள்ளிக்கு இச்சோதனையை செய்து கொள்ளலாம் என்று ஜெகன் கூறினார்.

2,000திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version