Site icon அநேகன்

தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதுவீர்! எஸ்பிஎம் மாணவர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், பிப். 19-

எஸ்பிஎம் தேர்வில்  அமரவிருக்கும் அனைத்து மாணவர்களும் தங்களது  தேர்வினை முழுமூச்சுடனும் உற்சாகத்துடனும் எழுத வேண்டுமென்று மஇகாவின் தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். விக்னேஸ்வரன்  கேட்டுக்  கொண்டார்.

கல்வி ஒன்றினால் மட்டுமே நமது வாழ்க்கைத் தரத்தை  உயர்த்த முடியும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இத்தனை ஆண்டுகள் பல்வேறு சூழ்நிலைகளைக் கடந்து வந்த மாணவர்கள்,  ஐந்தாம் படிவத்திற்கான தேர்வில் அமரவுள்ளார்கள். தேர்வு  எழுதும் மாணவர்கள் உற்சாகத்துடன், துணிவுடன் எழுத வேண்டும். நம்மாலும் சிறந்த முறையில் தேர்வு எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்களுக்காக அனுபவித்த சிரமங்களையெல்லாம் மறவாமல், அவர்களின்      எண்ணங்களை ஈடேற்றும் வகையில், மாணவர்கள்  மன உறுதியோடு  இந்தத் தேர்வை எழுத வேண்டும்.

மலேசிய இந்திய சமுதாயம் ஒரு கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தை முன் வைத்தே மலேசிய இந்தியர் காங்கிரஸ் பல்வேறு கல்வித் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டு வருகிறது. அந்த வகையில், கல்விக்காக நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு எம்ஐஇடி மூலம் நிதியுதவி  வழங்கி, மாணவர்களின் உயர்க்கல்விக்காக ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்டினை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.

எனவே, இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் துணிவுடன் தேர்வு எழுதி, சிறந்த தேர்ச்சிப் பெற வேண்டுமென்று எல்லாம் வல்ல இறையருளை வேண்டி, தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் டான்ஸ்ரீ   விக்னேஸ்வரன்   பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version