கோலாலம்பூர், பிப்.21-
ஜானா விபாவா திட்டம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி)சாட்சியாகத் தாம் நேற்று வாக்குமூலம் அளித்ததாக அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஜாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தினார்
“தேவையானால் எந்தத் தரப்பினருடனும் நான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று தமது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
ஜானா விபாவா திட்டம் கருவூலத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளதா என்பதை மறு ஆய்வு செய்ய ஏதுவாக இத்திட்டத்தின் அமலாக்கம் ஒத்தி வைக்கப்பட்டதாக முன்னதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாகிட் ஜமிடியை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டது.
கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதே 5.7 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஜானா விபாவா திட்டம். நாட்டின் 8ஆவது பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அரசாங்கத்தி கீழ் தெங்கு ஜாஃப்ருல் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
