Site icon அநேகன்

ஈப்போ சொக்சோ மறுவாழ்வு மையம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் -அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர்,பிப்.23-

ஈப்போ, மேருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) மறுவாழ்வு மையம் சுற்று வட்டார மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மனித வள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

இந்த மையத்தைச் சுற்றி நிறைய தொழிற்துறைகள் வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளதால் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை இது  ஏற்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது 12 விழுக்காட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதவாக்கில் இந்த மையம்  பூர்த்தியாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“அதே வேளையில், வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இந்த மையத்திற்கு வருகை தரும்போது மருத்துவ சுற்றுலா மையமாகவும் இது உருவெடுக்கும். இதன் வழி நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் “என்று தலைநகர், ரோயல் லேக் கிளப்பில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த மனித வள அமைச்சருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்..

600 மில்லியன் வெள்ளி என மிகப் பெரிய  செலவினத்தை உட்படுத்திய இந்த மறுவாழ்வு மையம்  மலாக்காவில் இயங்கி வரும் மையத்தைக் காட்டிலும் மிகப் பெரியது என்பதோடு அதிகமான வசதிகளையும் கொண்டிருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, மலாக்காவில் அமைந்துள்ள சொக்சோவின் மருத்துவ மருவாழ்வு மையம் ஒர் அருமையான பயிற்சி மையமாகச் செயல்பட்டு வருவதை அமைச்சர் பாராட்டினார்.

முதுகு வலி,கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு ‘பிசியோதெரப்பி’ உள்ளிட்ட முழுமையான பயிற்சியை இந்த மையம் நோயாளிகளுக்கு வழங்குகிறது.

உடலில் ஏற்பட்ட அனைத்து வகையான காயங்களையும்  குணப்படுத்துவதற்குத் தேவையான மிகச் சிறந்த உபகரணங்கள் ம்ற்றும் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் ‘பிசியோதெரப்பி’ நிபுணர்களை இது  கொண்டுள்ளது.

அண்மையில் இந்த மையத்திற்குத் தாம் வருகை மேற்கொண்டபோது பக்கவாதத்தினால் படுத்தப் படுக்கையாக இருந்த ஒருவர் இங்கு மேற்கொண்ட பயிற்சிக்குப் பின்னர் கிட்டத்தட்ட 70 விழுக்காடு குணமடைந்திருப்பதைத் தான் கண்டதாக அமைச்சர் கூறினார்.

இந்த மையத்தில் பயிற்சி பெற ஒருவர் சொக்சோ சந்தாதாரராக இருப்பது அவசியம். வேலை செய்யும் காலத்தில் உடல் நலம் சார்ந்த பல பிரச்னைகளை எதிர்நோக்கியிருப்பவர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்று பயனடையும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

.

.

Exit mobile version