Site icon அநேகன்

வெ.388.1 பில்.மதிப்பிலான ஒற்றுமை அரசாங்கத்தின் 2023 பட்ஜெட்

கோலாலம்பூர், பிப்.24-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் 2023 ஆம் ஆண்டுக்கான 388.1 பில்லியன் வெள்ளி மதிப்பிலான வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதில் நிர்வாகச் செலவினங்களுக்கு  289.1 பில்லியன் வெள்ளி, எதிர்பாராத சேமிப்பு தொகை 2 பில்லியன் வெள்ளி உட்பட மேம்பாட்டு செலவினங்களுக்கு 99 பில்லியன் வெள்ளி அடங்கியுள்ளது.

விரிவாக்கம் காணும் நிதி கொள்கையின் கீழ் மேம்பாட்டு நிதி கடந்த ஆண்டின் 71.6 பில்லியன் வெள்ளியைக் காட்டிலும் 97 பில்லியன் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.


“ஏழ்மை ஒழிப்பு, பொது மக்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மக்களுக்குப் பயன்படுவது உறுதிப்படுத்தப்படும்” என்று மக்களையில் 2023 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு முன்பு 2023 பட்ஜெட் முந்தைய அரசாங்கத்தால் கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது 372.3 பில்லியன் வெள்ளியை உட்படுத்திய பட்ஜெட் ஆகும்.

எனினும், 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை.

ஒற்றுமை அரசாங்கத்தின் இந்த பட்ஜெட் மூன்று இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது. நீடித்த பொருளாதார வளர்ச்சி, நிறுவன மறுமலர்ச்சி, சரிசமமற்ற நிலையை சமநிலைப்படுத்துவதற்காக நம்பிக்கை மற்றும் சமூக நீதியை ஏற்படுத்துதல் ஆகியவையே அவை.

“மக்களின் குமுறல்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய உங்கள் அனைவரின் உரத்தக் குரல்களுக்கு செவி சாய்க்கும் வகையில் உண்மையான தகவல்கள் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையிலான  பட்ஜெட்டை  நான் தாக்கல் செய்கிறேன். தவிர, மக்களின் சிந்தனையைக் குழப்பும் தன்மையிலான புள்ளி விவரம் எதுவும் இல்லை ” என்றார் அன்வார்.

-பெர்னாமா

Exit mobile version