கோலாலம்பூர், செப்.12-
மூன்று இந்திய தொழிற்துறைகளில் நீண்ட காலம் நிலவிய அந்நிய தொழிலாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உதவிய மனித வள அமைச்சர் வ.சிவகுமாருக்கு மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தனது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜவுளியகங்கள், முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் நகைக்கடைகள் ஆகியவற்றில் வேலை செய்வதற்கு 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்குக் கடுமையாகப் பாடுபட்ட மனித வள அமைச்சர் வ.சிவகுமாருக்கு ரசூல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இந்தியாவில் இருந்து இங்கு வந்த பொற்கொல்லர்கள் யாவரும் அவர்களின் நாட்டிற்கே திரும்பிவிட்டார்கள். சிலர் வேலைகளைக் கற்றுக் கொண்டு வெளிநாடு சென்றுவிட்டார்கள்.இந்த நிலையில் நகைக் கடைகளில் வேலை செய்வதற்கு அந்நிய தொழிலாளர்கள் இன்றி கடந்த 14 ஆண்டுகளாக நாங்கள் தவித்து வருகிறோம்” என்று தலைநகர் ஜெயபக்தி மண்டபத்தில் மனித வள அமைச்சர் சிவகுமார் 30 தமிழ்ப்பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
” தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருவது மற்றொரு புறம் சவால்மிக்க சூழலை ஏற்படுத்தி உள்ளது. இச்சூழலில் கடைகளை மூடும் நிலைக்கு சில வியாபாரிகள் தள்ளப்பட்டனர். வியாபாரிகளின் இந்த மோசமான நிலை குறித்து மனித வள அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடம் நாங்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தோம்” என்றார்.
எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில் முதற்கட்டமாக 7,500 அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் சிவகுமார் அறிவித்தது தங்களுக்கு புது விடிவெள்ளியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.
“இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமைச்சர் சிவகுமார் , உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசாதியோன் மறைந்த உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப் ஆகியோருக்கு ரசூல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
